Friday, June 21, 2013

அமெரிக்கா – தாலிபான் பேச்சுவார்த்தையில் கர்ஸாய்க்கு கோபம்:அமெரிக்கா- ஆப்கான் பேச்சுவார்த்தை நிறுத்தம்!

காபூல்:தாலிபான்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்காவின் முடிவை கண்டித்து அமெரிக்கா-ஆப்கான் அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ஆப்கான் அதிபர் ஹாமித் கர்ஸாய் ரத்துச் செய்துள்ளார்.
2014-ஆம் ஆண்டிற்கு பிறகு ஆப்கானில் தொடரும் நேட்டோ ராணுவத்தினருக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நடக்கவிருந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இதுக்குறித்து ஹாமித் கர்ஸாயின் செய்தி தொடர்பாளர் அய்மல் ஃபைஸி கூறியது: தாலிபானுடனான பேச்சுவார்த்தையின்
கண்காணிப்பை வெளிநாடுகள் ஆப்கானிடம் ஒப்படைக்காவிட்டால் கத்தர் தலைநகர் தோஹாவில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையை ஆப்கான் அரசு புறக்கணிக்கும். ஆப்கானில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா முன்பு கூறியதற்கும், தற்போது கூறுவதற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளன. பேச்சுவார்த்தை நடத்துவதற்காகதோஹாவில் தாலிபான் திறந்துள்ள அலுவலகத்திற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று பெயரிட்டுள்ளதை ஒப்புக்கொள்ள முடியாது என்பது ஆப்கான் அதிபருடைய நிலைப்பாடாகும்.
மேலும் தோஹா அலுவலகத்தில் தாலிபானின் கொடியை ஏற்றியதை கர்ஸாய் எதிர்க்கிறார். இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்பது தற்போது இல்லை. இவ்வாறு ஃபைஸி கூறியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பிற்கான பொறுப்பை ஆப்கான் ராணுவத்திடம் பூரணமாக ஒப்படைத்த பிறகு கர்ஸாய், அமெரிக்காவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா-தாலிபான் பிரதிநிதிகளின் முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று தோஹாவில் துவங்கும் என்று அமெரிக்க அதிகாரி அறிவித்துள்ளார்.
அதேவேளையில் ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தின் முக்கிய தளமான பக்ராம் விமான நிலையத்தின் மீது தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் நான்குஅமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இரண்டு ராக்கெட்டுக்கள் விமானதளத்தை தாக்கின.

No comments:

Post a Comment