
பெங்களூர்:கர்நாடகா பா.ஜ.கவில் பிரிவினை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு ஆதரவான ஏழு அமைச்சர்களும், ஆறு எம்.எல்.ஏக்களும் அவரிடம் ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளனர். ஏழு அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக எடியூரப்பாவின் முகாம் அறிவித்துள்ளது.
சில அமைச்சர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக முதல்வர் டி.வி.சதானந்தா கவுடா கட்சி தலைவர் நிதின் கட்கரிக்கு புகார் அளித்திருந்தார்.
ஷோபா கரந்த்லாஜே, பஸவராஜ் பொம்மே, உமேஷ் காட்டி, சி.எம்.உதாஸி, வி.சோமன்னா, எம்.பி.ரேணுகா ஆச்சார்யா, முருகேஷ் நிரானி ஆகிய அமைச்சர்கள் எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். தங்களுக்கு எதிராக முதல்வர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ள சூழலில் அமைச்சரவையில் இருந்து விலகாமல் வேறு வழியில்லை என்று எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
எடியூரப்பாவின் வீட்டில் நடந்த அவரது ஆதரவாளர்களின் கூட்டத்தில் ராஜினாமா கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே எடியூரப்பா தனது அரசியல் எதிர்காலம் குறித்து கட்சியில் தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் எடியூரப்பா மீது சி.பி.ஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எடியூரப்பாவிற்கு ஆதரவான அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் நேற்று அவரது வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
எடியூரப்பாவின் முன்னால் இருக்கும் வழிகள் குறித்து சில தலைவர்கள் விவாதித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறிதும் தாமதிக்காமல் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவேண்டும் என்று சில எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்ததாக கருதப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு எடியூரப்பாவிடம் கலந்தாலோசிக்காத கட்சியின் உயர்தலைவர்களின் அணுகுமுறை குறித்து இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் சதானந்தா கவுடாவும், கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் எடியூரப்பாவிடம் இதுக்குறித்து விவாதிக்காதது, கட்சி தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment