Monday 28 May 2012

ஹிந்து மத பெண்களுக்கு பாகிஸ்தான் விதிகளில் தளர்வு!


Pak eases rules for married Hindu women to obtain ID cards
இஸ்லாமாபாத்:ஹிந்து பெண்களுக்கு அநீதம் இழைக்கப்படுவதாக தினத்தந்தி போன்ற ஏடுகள் அவதூறுகளை பரப்பி வரும் வேளையில் பாகிஸ்தானில் வாழும் மணமான ஹிந்துப் பெண்கள் தேசிய அடையாள அட்டை பெற விதிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் திருத்தியிருக்கிறது.
ஹிந்துக்கள் திருமணத்தைப் பதிவு செய்ய சட்டம் ஏதும் அந்நாட்டில் இல்லை. எனவே திருமணமான பெண்கள் அதை சட்டப்பூர்வமாக நிரூபித்து தேசிய அடையாள அட்டை பெற முடியாமல் இருந்தது.
இனி திருமணமான பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதையும் தங்களுடைய கணவர் பெயர் இன்னார் என்பதையும் உறுதிகூறி ஆவணம் அளித்தால் போதும்.
அதில் இருவரின் கையொப்பமும் இருந்தால் அது சட்டப்பூர்வ ஆவணமாக ஏற்கப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். ஹிந்துத் திருமணங்களையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மசோதா ஒன்றும் தயாராகி வருகிறது.

ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!


Kazmi has a right to get copies of remand papers- Court
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மது காஸ்மிக்கு போலீஸ், அவரை காவலில் வைத்திருப்பதற்கான (ரிமாண்ட்) ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார் வசமிருக்கும் ரிமாண்ட் ஆவணங்கள் ரகசியமானது அல்ல. என்ன காரணத்தால் காலவரையற்று காஸ்மியின் போலீஸ் காவல் நீட்டிக்கப்படுகிறது? என்பதை அறிவது காஸ்மியின் அடிப்படை உரிமையாகும் என்று கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுரீந்தர்சிங் ராதி கூறினார்.
காலவரையற்று போலீஸ் கஸ்டடியின் கால அவகாசத்தை நீட்டிப்பதன் காரணம் குறித்து அறிவதற்கு ரிமாண்ட் ஆவண நகல்களை காஸ்மி கோரியிருந்தார். ஆனால், இக்கோரிக்கையை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தை அணுகினார். எந்த கட்டத்திலும் குற்றம் சாட்டப்பட்டவரின் கோரிக்கைக்கு ஏற்ப ஆவணங்களின் நகல்களை வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் அதிகாரம் வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

யுரேனியம் செறிவூட்டல்: ஈரான் மறுப்பு!


Iran Says It Won't Halt Uranium Enrichment
டெஹ்ரான்:ஈரானில் நடத்திய பரிசோதனைகளில் முன்னர் இல்லாத அளவுக்கு யுரேனியம் செறிவூட்டப்பட்டுள்ளதை கண்டுபிடித்ததாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கையை பொருட்படுத்த தேவையில்லை என்றும், அது தொழில்நுட்ப ரீதியான பிரச்சனை என்றும் ஈரான் கூறியுள்ளது.
சர்வதேச அணுசக்தி ஏஜன்சியில் ஈரானின் பிரதிநிதி அலி அஸ்கர் சுல்தானியை மேற்கோள்காட்டி ஈரானின் செய்தி நிறுவனமான இர்னா இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானில் கூமிற்கு அடுத்துள்ள மலைப்பகுதியில் நிலத்துக்கு அடியில் உள்ள அணுசக்தி நிலையத்தில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக யுரேனியம் செறிவூட்டப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால், முன்னர் 20 சதவீதத்திற்கும் அதிகமான யுரேனியம் செறிவூட்டல் ஈரானில் நடப்பதை கண்டுபிடிக்க சர்வதேச அணுசக்தி ஏஜன்சியால் இயலவில்லை.
வெறும் ஒரு தொழில்நுட்ப ரீதியான பிரச்சனையை பெரிதுப்படுத்தி அரசியல் மயமாக்கும் போக்கு சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவை தகர்ப்பதற்கான முயற்சியாகும் என சுல்தானி குற்றம் சாட்டுகிறார்.
இதனிடையே, மேலும் 2 அணுசக்தி நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஈரானின் அணுசக்தி துறை தலைவர் ஃபரீதூன் அப்பாஸி கூறியுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய உதவியுடன் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை ஈரான் துவக்கியது.
புதியதாக துவக்கவிருக்கும் அணுசக்தி நிலையங்கள் 1 அல்லது 2 வருடங்களில் இயங்க துவங்கும் என அப்பாஸி கூறியுள்ளார்.

இந்தியாவில் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் – சி.இ.ஆர்.டி-இன்!


websites under hacker threat- CERT-In
புதுடெல்லி:மிகச்சிறந்த ரீதியில் சேவையாற்றி வரும் அரசு, தனியார் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் நிலவுவதாக இந்தியாவின் சைபர் ஏஜன்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.
டிஸ்ட்ரிப்யூட்டட் டினைல் ஆஃப் சர்வீஸ்(Distributed Denial of Service (DDoS)) மூலமாக ஹாக்கர்கள் பிறருடைய கம்ப்யூட்டர்களில் நுழைந்து ஹாக்கிங் செய்கின்றனர்.
ஹாக்கிங் செய்ய விரும்பும் நபரின் சிஸ்டத்திற்கு தொடர்ந்து மெஸேஜ்களை அனுப்புவதும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் செய்வதற்கு அவரை நிர்பந்திப்பதும் வழக்கமாகும்.
டி.டி.ஒ.எஸ்ஸை தடுக்க ஃபயர்வால்ஸும், பாதுகாப்பு டூல்ஸையும் அப்டேட் செய்வதன் மூலமே ஹாக்கிங்கை தடுப்பதற்கான ஒரே வழி என சைபர் ஏஜன்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக நேற்று முன்தினம் முடிவடைந்த பாராளுமன்ற கூட்ட அமர்வில் அமைச்சர் சச்சின் பைலட் சி.இ.ஆர்.டி-இன்னை மேற்கோள்காட்டி தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு 8266 வழக்குகள் சைபர் பாதுகாப்பு தொடர்பாக பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 2010-ஆம் ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 10315 வழக்குகளும், 2011-ஆம் ஆண்டு 13301 வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் ஊடுருவல், வைரஸ்களை அனுப்புவது ஆகியன தொடர்பான வழக்குகள் தாம் மேற்கண்டவற்றில் பெரும்பாலானவையாகும்.

பணியை ராஜினாமாச் செய்துவிட்டு மக்களுடன் சேருங்கள்: சிரியா ராணுவத்தினருக்கு ஷேக் கர்ழாவி அழைப்பு!


ஷேக் கர்ழாவி
தோஹா:வன விலங்குகளைகூட தோற்கடிக்கும் வகையில் கொடூர அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு நிரபராதிகளை கொடுமைச் செய்யும் அரசின் கீழ் ஆற்றும் பணியை ராஜினாமாச் செய்துவிட்டு மக்களுடன் சேருமாறு சிரியா ராணுவத்தினருக்கு உலக பிரசித்திப் பெற்ற முஸ்லிம் மார்க்க அறிஞர் ஷேக் யூசுஃப் அல்கர்ழாவி அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தர் தலைநகர் தோஹாவில் உள்ள உமர் பின் கத்தாப் மஸ்ஜிதில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரை நிகழ்த்திய கர்ழாவி இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியது: “இறையச்சமும், மனசாட்சியும் கொண்ட ராணுவத்தினர் எவரும் தனது சகோதரர்கள் மீது நடத்தப்படும் கொடூரங்களில் பங்காளர்கள் ஆகிவிடாதீர்கள்.
ஐ.நா சபை நியமித்த கண்காணிப்பாளர்களால் சிரியாவில் எதுவும் செய்ய இயலவில்லை. கத்தாபி உள்ளிட்ட அரபுலக சர்வாதிகாரிகளின் நிலைமைதான் சிர்யாவின் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும். சிரியா மக்களுக்காக தொடர்ந்து பிரார்த்திப்பது முஸ்லிம்களின் கடமையாகும்.
உணவு கிடைக்காமல் யெமனில் லட்சக்கணக்கான குழந்தைகள் எலும்பும், தோலுமாக மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். அந்த நாட்டின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியது அரபு-இஸ்லாமிய நாடுகளின் கடமையாகும். நேற்று முன்தினம் நடந்த யெமன் நட்புறவு நாடுகளின் கூட்டத்தில் கிடைத்த தொகை அவர்களின் தேவைகளை நிறைவேற்ற போதுமானதல்ல.” இவ்வாறு கர்ழாவி கூறினார்.