
கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த மாநகராட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிப் பெற்றுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் 4 மாநகராட்சிகளை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் மற்றும் இடது சாரி கூட்டணி தலா ஒரு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளன.
மேற்கு வங்க மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணி, பாஜக ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன. மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் திரிணமூல் காங்கிரஸூம், காங்கிரசும் தனித்துப் போட்டியிட்டதாலும், 2011 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதலாவது தேர்தல் என்பதாலும், இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் நான்கு மாநகராட்சிகளை திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. மிகவும் மதிப்புக்குரியதாகக் கருதப்படும் துர்காபூர் மாநகராட்சியையும், கடந்த 30 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த துப்குரி நகராட்சியையும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதிக்கு உள்பட்ட நல்ஹாட்டி நகராட்சியையும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அந்தக் கட்சி கைப்பற்றிய மற்றொரு உள்ளாட்சி அமைப்பு பன்ஸ்குர் நகராட்சியாகும். கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் இந்த நகராட்சி அமைந்துள்ளது.
கொல்கத்தா மாநகராட்சிக்கு அடுத்த பெரும் பணக்கார நகராட்சியாகக் கருதப்படும் ஹால்தியா நகராட்சியை இடதுசாரிகள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூபர்ஸ் கேம்ப் நகராட்சியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
No comments:
Post a Comment