Saturday, January 12, 2013

அபூகுரைப் சிறைக் கைதிகளுக்கு 50 லட்சம் டாலர் இழப்பீடு!


Iraqis awarded $5m over Abu Ghraib abuse
பாக்தாத்:ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த பிரசித்திப் பெற்ற அபூ குரைப் சிறைச்சாலையில் சித்திரவதைச் செய்யப்பட்ட கைதிகளுக்கு இழப்பீடாக 50 லட்சம் டாலர் தொகையை அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான என்கிலிட்டி ஹோல்டிங்ஸ் வழங்கியுள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த அபூ குரைப் மற்றும் சில சிறைச்சாலைகளில் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்ட 71 பேருக்கு முதல் கட்டமாக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு தலைமை வகித்த எல்-3 சர்வீஸஸ், என்கிலிட்டி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகும்.
அமெரிக்காவின் தனியார் பாதுகாப்பு ஏஜன்சிகள் ஈராக் சிறைக் கைதிகளை கொடூரமாக சித்திரவதைச் செய்ததாக பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராகி வாதாடிய பஹர் ஆஸ்மி தெரிவித்தார். செண்டர் ஃபார் கான்ஸ்ட்யூஸனல் ரைட்ஸின் இயக்குநர் தாம் ஆஸ்மி. அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள க்ரீன்பெல்டில் மாவட்ட ஃபெடரல் நீதிமன்றத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஈராக் சிறைக்கைதிகள் வழக்கு தொடர்ந்தனர். ஈராக் முழுவதும் சிறைக் கைதிகளை சித்திரவதைச் செய்ய எல்-3 சர்வீஸிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. இவர்களின் அட்டூழியத்தை நிறுத்த என்கிலிட்டி ஹோல்டிங்ஸ் நடவடிக்க எடுக்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஈராக் அதிகாரிகளுக்கு இதனை இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.
சிறைக்கைதிகளை சித்திரவதைச் செய்யும் காட்சிகள் 2004-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நினைவு இழக்கும் வரை கைதிகளின் தலையை சுவரில் மோதுதல், நிர்வாணமாக்கி ஆணுறுப்பில் மின்சார அதிர்ச்சி கொடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல், கை, கால்கள், தலை ஆகியவற்றை இறுக்கி சங்கிலியால் பிணைத்தல், ரத்தம் வாந்தி எடுக்கும் வரை தண்ணீரை குடிக்கவைத்தல், துணியால் முகத்தைக் கட்டி தண்ணீரை வேகமாக பாய்ச்சி மூச்சை திணறவைத்தல்(வாட்டர் போர்டிங்) உள்ளிட்ட சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அமெரிக்க ராணுவம் 2004-ஆம் ஆண்டு நடத்திய விசாரணையில் 44 சம்பவங்களில் கடுமையான சித்திரவதைகள் நடந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க சட்டத்துறை ஏராளமான எல்-3 சர்வீஸ் பணியாளர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால், அரசுக்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதில் இருந்து எல்-3 சர்வீஸை நீக்கவில்லை. மற்றொரு பாதுகாப்பு ஏஜன்சியான சி.ஐ.சி.ஐ இண்டர்நேசனலுக்கு எதிரான வழக்கின் விசாரணை அடுத்த மாதம் துவங்கும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment