மும்பை:’திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் ,
பெண் சேர்ந்து வாழும் உறவுமுறை திருமண உறவை சீரழிக்கிறது’ என்று மும்பை
உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு தம்பதி, கடந்த
1987ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதே ஆண்டில் கணவர் வேறொரு
பெண்ணுடன் சென்று விட்டார். மனைவி கடந்த 25 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து
வருகிறார். மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் தாக்கல் செய்த மனுவை
குடும்பநல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், குடும்பத்தை பராமரிக்க
மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, அந்த பெண்ணுக்கு முதலில் ரூ400
வழங்கப்பட்டு பின்னர் பலமுறை இந்த தொகை அதிகரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு
இந்த தொகை மாதம் ஒன்றுக்கு ரூ7,000 ஆக அதிகரிக்கப்பட்டது. எனினும்,
குடும்பத்தை பராமரிக்க இந்த தொகை போதாது என்றும் இதை ரூ9,000 ஆக அதிகரிக்க
கோரியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் அனூப் மேத்தா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜீவனாம்ச தொகையை அதிகரிக்க
முடியாது என்று கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். ‘ரயில்வே ஊழியரான எனக்கு
மாதம் ரூ32,000 மட்டுமே சம்பளம் கிடைக்கிறது. திருமணம் ஆகாமல் ஒரு
பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறேன். அவர் மூலாக எனக்கு 3 குழந்தைகள்
இருக்கின்றனர். அவர்களை மட்டுமின்றி, பெற்றோரையும் கவனிக்க வேண்டியது
இருப்பதால் ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க இயலாது’ என்று அவர்
கூறினார்.
‘திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும்
ஒருவருக்கு எப்படி 3 குழந்தைகள் இருக்க முடியும்?’ என்று ஆச்சரியம்
தெரிவித்த நீதிபதிகள், ரயில்வே ஊழியராக இருப்பவர் ரயில்வேக்களை மட்டுமே
பராமரிக்க வேண்டும். இதுபோன்ற உறவுமுறையில் வாழ கூடாது. திருமணம் ஆகாமல்
சேர்ந்து வாழும் உறவுமுறை, திருமணங்களை சீரழிக்கிறது’ என்று கண்டித்தனர்.
பின்னர், மனுவை கோடை விடுமுறைக்கு பிறகு
விசாரிப்பதாக ஒத்திவைத்தனர். இந்த இடைபட்ட காலத்தில், விவாகரத்துக்கான ஒரு
சுமூக தீர்வு காணும்படி தம்பதிக்கு நீதிபதிகள் அறிவுரை கூறினர்.
No comments:
Post a Comment