Wednesday, June 6, 2012

போலி என்கவுண்டர் 11 போலீசார் சரண்!


Ranbir Singh
புதுடெல்லி:எம்.பி.ஏ மாணவர் ரன்பீர் சிங்கை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற வழக்கில் 11 போலீசார் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். கடந்த மாதம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் மீது நீதிமன்றம் ஜாமீன் இல்லாத வாரண்டை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஜெய்ஸ்வால், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால் தத் பட், ராஜேஷ் பிஸ்ட் உள்பட 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீசார் சத்பீர் சிங், சுநீல் ஷைனி, சந்தர்பால், செளரவ்நேதியால், நாகேந்திர நாத், விகாஸ் சந்திர பலூனி, சஞ்சய் ராவத், மோகன் சிங் ராணா, இந்தர் பான் சிங், மனோஜ் குமார், ஜஸ்பால் சிங் கோஷைன் ஆகியோர் மீது ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
காஜியாபாத்தை சேர்ந்த எம்.பி.ஏ. மாணவர் ரன்பிர் சிங் (22), டேராடூன் மொஹினி சாலையில் 2009-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி தனது சகாக்களுடன் சேர்ந்து குற்றச்செயலில் ஈடுபட முயன்றபோது, அவரை சுட்டுக் கொன்றதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதை மறுத்த ரன்பீர் சிங்கின் தந்தை ரவீந்திர சிங், “எனது மகன் வேலை தேடி டேராடூன் சென்றார். அவரை திருட்டு வழக்கில் தவறுதலாக போலீஸார் கைது செய்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர், இதை ஒரு என்கவுன்ட்டர் எனக் கூறியுள்ளனர்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் 18 காவலர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. முன்னதாக ரவீந்திர சிங்கின் வேண்டுகோளை ஏற்று, இந்த வழக்கின் விசாரணையை டெல்லி நீதிமன்றத்தில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூலை 4-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment