விபச்சாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகச் சொல்லி,
உகாண்டா நாட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சரின் கோரிக்கையை அம்மாநிலக் காவல்துறை நிராகரித்து, அமைச்சரை அவமதித்துவிட்டது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தினார். கேஜ்ரிவாலின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம், பிற அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு நாட்டுத் தூதரகங்கள் இந்தியத் தலைநகர் டெல்லியில் அமைந்திருப்பதால்,
டெல்லியின் பாதுகாப்பு மத்திய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதுதான் நல்லது என்றும் சிலர் கூறுகின்றனர்.
பொதுவாக மாநிலக் காவல்துறை அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தான் இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லியை மாநிலமாக மாற்றிய போது, காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமாறு தான் பார்த்துக் கொள்ளப்பட்டது.
2003 ஆம் ஆண்டு மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியின் போது, அப்போதைய துணைப் பிரதமர் எல். கே. அத்வானியால் கொண்டுவரப்பட்ட, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவில் கூட, காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றே கூறப்பட்டிருந்தது.
டெல்லி காவல்துறை செய்திகளில் அடிபடுவது இது முதன்முறையன்று. நாட்டில் ஆங்காங்கே குண்டு வெடிப்புகள் நடந்து முடிந்த பின்னர், இது பற்றி டெல்லி காவல்துறை எச்சரிக்கை செய்திருந்தது என்பது போன்ற செய்திகளும் வெளியாகும்.
டெல்லியைத் தவிர்த்த மாநிலங்களில் உள்ள காவல்துறைகள் பிற மாநிலக் காவல்துறைகளுக்கு இது போன்ற எச்சரிக்கையை ஒரு முறை கூட செய்ததாக இதுவரை செய்தி வெளியாகவில்லை.
பயங்கரவாதிகளின் புகலிடமாக டெல்லி விளங்குகிறது அல்லது உளவுத்துறையின் தகவலை டெல்லி காவல்துறை கூறுகிறது என்பதைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?
முதல் காரணம் மறுக்கப்பட்டால், உளவுத்துறை அந்தந்த மாநிலக் காவல்துறைகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்காமல் டெல்லி காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கக் காரணம் என்ன?
உளவுத்துறை தன்னுடைய திறமையின்மையை மறைப்பதற்காக, முன்னரே டெல்லி காவல் துறை எச்சரித்திருந்தது என்ற செய்தியைப் பரப்பிவிடுகிறதா?
பயங்கரவாதிகள் பற்றித் தங்களுக்குத் தகவல் கிடைத்தால், அதை உளவு அமைப்புகளுக்கு அனுப்பி, அவர்கள் அந்தத் தகவலை உறுதி செய்து கொண்டு தொடர்புடைய மாநிலக் காவல் துறைகளுக்கு நேரடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்புவதுதானே முறையாக இருக்கும்?
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிருப்பதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தால், அதை ரகசியமாகத் தங்கள் துறை வல்லுநர்களுக்கிடையே மட்டும் பகிர்ந்து, அந்தத் தாக்குதலை முறியடிக்கத் திட்டமிடுவதை விடுத்து, அதை ஊடகங்களில் பரப்புவதன் மூலம், பயங்கரவாதிகள் தங்கள் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அல்லது ஒரு பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்திவிட்டு, வேறு ஒரு பயங்கரவாத அமைப்பின் மீது அந்தப் பழியை சுமத்த காவல் துறையே வழி வகை செய்கிறதா?
என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கப் போவது யார்?
- அழகப்பன்
No comments:
Post a Comment