
புதுடெல்லி: கருணை மனுக்களை பரிசீலிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டால் தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலான வழக்குகள் உள்ளிட்டவையில் வழங்கப்படும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது தொடர்பாக 15 பேரும் தாக்கல் செய்த “ரிட்’ மனுக்களை விசாரித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
“தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது அரசியலமைப்பின் 72/161 சட்ட விதி வழங்கிய அதிகாரத்தைக் குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுநரோ பயன்படுத்துவது அவர்களின் கடமையே தவிர தனியுரிமை கிடையாது.
அரசியலமைப்பின் மிக உயரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதால், கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவரும், ஆளுநரும் முடிவு எடுக்க வேண்டிய காலத்தை அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய முன்னோர்கள் வகுக்கவில்லை. அப்படியென்றால், கருணை மனுக்கள் மீது நியாயமான காலத்துக்குள் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்பதே அர்த்தம்.
இத்தகைய சூழலில், கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நியாயமில்லாத, விளக்கம் அளிக்க முடியாத, கூடுதலாக கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுமானால், அதில் தலையிட்டு அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமையாகும்.
நீதிமன்றம் தலையிடும்
அரசியலமைப்பின் 72/161 சட்ட விதியின்படி, தூக்குத் தண்டனை பெற்ற கைதி, கருணை மனுவை விண்ணப்பிக்க சட்டப்படி உரிமை பெறுகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பத்தின் பேரில் அவர் விண்ணப்பிக்க வேண்டும் என்பதில்லை. இதுபோன்ற மனுக்கள் மீது உரிய கவனத்தையும், அக்கறையையும் செலுத்தி அரசியலமைப்புக் கடமையை சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்ற வேண்டும்
அதைச் செய்யத் தவறும்போது, அரசியலமைப்பையும் அதன் மதிப்பையும் பாதுகாக்க நீதித்துறை தலையிட வேண்டியிருக்கும். குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கூட, வழக்காடுவதற்குரிய சட்டப் பாதுகாப்பை நமது அரசியலமைப்பு அளித்துள்ளது.
அச்சட்டத்தைப் பாதுகாப்பதும் செயல்படுத்துவதும்தான் நீதிமன்றங்களின் கடமையாகும். எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்றம் தலையிடுவதால், அரசியலமைப்பின் 72/161 சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கோ, ஆளுநருக்கோ வழங்கியுள்ள அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருதக்கூடாது. தூக்குத் தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையைப் பாதுகாக்கவே இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
எனவே, பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா, சுரேஷ், ராம்ஜி, பிரவீண் குமார், குர்மீத் சிங், சோனியா, சஞ்சீவ், சுந்தர் சிங், ஜாஃபர் அலீ, மகன்லால் பெராலா, ஷிவு, ஜதேஸ்வாமி ஆகியோருக்கு உறுதிப்படுத்தப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் 1993, ஏப்ரல் 9-ஆம் தேதி வீரப்பன் கூட்டாளிகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி போலீஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த மைசூர் தடா நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம், மாதையா ஆகிய நால்வருக்கு 2001, செப்டம்பர் 29-ஆம் தேதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து நால்வரும் மேல்முறையீடு செய்த வழக்கில் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் 2004, ஜனவரி 29-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, அவர்களின் மறுசீராய்வு மனுக்களும் அதே ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, நால்வரும் தங்களின் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு 2004-ஆம் ஆண்டில் கருணை மனுக்களை அனுப்பினர். அதன் மீதான கோப்புகள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. கடைசியாக, வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் மற்றும் பல்வேறு வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 11 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி நிராகரித்தார்.
இதையடுத்து, 15 பேரும் தாக்கல் செய்த “ரிட்’ மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை செவ்வாய்க்கிழமை அளித்தது.
தண்டனை குறைப்பு ஏன்?
தூக்குத் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு கருணை மனுக்களை அனுப்பிய பிறகு 2004, ஜனவரி 29 முதல் 2013, டிசம்பர் 17-ஆம் தேதி வரை மொத்தம் 9 ஆண்டுகள் 11 மாதங்களை சிறையில் கழித்துள்ளனர்.
அதில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனைவரும் 2004, பிப்ரவரி 12-ஆம் தேதி அனுப்பியுள்ளனர். அதன் மீது ஒன்பது ஆண்டுகள் தாமதமாக 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இக் காலகட்டத்தில் தினமும் மரணத்தை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்து மன, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற அவர்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. இதேபோன்ற காரணத்துடன் மேலும் 11 கைதிகள் தாக்கல் செய்த மனுக்களின் வாதத்தையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment