தஞ்சாவூர், டிச.4–
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக மழை பெய்கிறது.
நேற்று இரவு நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இன்று காலையும் மழை நீடித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. வேதாரண்யத்தில் 53.6 மி.மீ. மழையும், தலைஞாயிறில் 66.6 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. பலத்த மழை பெய்தாலும் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று 5–வது நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சற்று வெறித்து காணப்பட்ட மழை இன்று காலை முதல் மீண்டும் பெய்ய தொடங்கியது.
பலத்த மழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நாகை கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment