Tuesday, November 19, 2013

முஸஃபர் நகர் கலவரம்:சுதந்திர விசாரணை கோரும் மனு-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!


புதுடெல்லி:முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான விசாரணையை உ.பி மாநில
அரசிடமிருந்து மாற்றி ஒரு சுதந்திர ஏஜன்சியிடம் ஒப்படைக்க கோரும் மனுவின் மீதான விசாரணையில் மத்திய அரசுக்கும், உ.பி மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 21-ஆம் தேதிக்கும் பதில் அளிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
மீரட்டில் ஜாட் மகாசபை சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.முஸஃபர் நகர் கலவரம் தொடர்பான இதர மனுக்களுடன் இந்த மனுவும் பரிசீலிக்கப்படும். அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் 50,995 பேரில் 41 ஆயிரம் பேர் கிராமங்களுக்கு
திரும்பிச் சென்றுவிட்டதாக கடந்த வாரம் உ.பி மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.10 ஆயிரம் பேர் 10 முகாம்களில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் கிராமங்களுக்கு திரும்பிச் செல்ல மறுப்பதாகவும் சஹாரன்பூர் டிவிசனல் கமிஷனர் சமர்ப்பித்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார். கிராமங்களுக்கு திரும்பச் செல்ல விரும்பாத குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வன்முறைகள் தொடர்பாக 581 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட் 61 பேருடைய குடும்பத்தினருக்கு ரூ.6.1 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.கடுமையான காயமுற்ற 35 பேருக்கு 17.50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.சாதாரண காயமுற்ற 47 பேருக்கு 9.40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியாக 1.49 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கொல்லப்பட்ட 56 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் ஆகிய விபரங்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை தொடர்பாக 21-ஆம் தேதி நீதிமன்றம் விசாரணை நடத்தும்.

No comments:

Post a Comment