Tuesday, September 24, 2013

எகிப்து: இஃவானுல் முஸ்லிமீனுக்கு தடை!


கெய்ரோ: அரசு சாரா நிறுவனம் என்ற நிலையில் இஃவானுல் முஸ்லிமீன் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கும் எகிப்திய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமைப்பின் நிதிகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட கெய்ரோ நிர்வாக நீதிமன்றம், தலைநகரில் உள்ள இஃவானுல் முஸ்லிமீனின் தலைமையகத்தை மூடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டில் விசாரணை முடியும் வரை முடக்கப்பட்ட சொத்துக்களை கண்காணிக்க இடைக்கால அரசு ஒரு கமிஷனை உருவாக்க வேண்டும். இஃவானுல் முஸ்லிமீனின் முன்னணி அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இஃவானின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 85 ஆண்டுகள் பழமையான இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தை 1954 ஆம் ஆண்டு ராணுவ அரசு தடை செய்தது. பின்னர் சமூக சேவைகளில் ஈடுபட்ட இஃவான் உறுப்பினர்கள் தேர்தல்களில் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஆனால், அரசியல் விவகாரங்களில் தலையிடும் இஃவானின் சட்ட அந்தஸ்து குறித்து எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இஃவானுல் முஸ்லிமீன் அரசு சாரா அமைப்பாக பதிவு செய்தது.
இஃவானுல் முஸ்லிமீனின் சட்ட அந்தஸ்து குறித்து பரிசோதிக்க இடைக்கால சட்டவிரோத அரசு ஒரு கமிஷனை நியமித்திருந்தது. இஃவானுல் முஸ்லிமீனின் அரசு சாரா அமைப்பிற்கான பதிவு சட்டவிரோதம் என்று எதிர்கட்சியின் குற்றச்சாட்டை அங்கீகரித்தது கமிஷன்.
இஃவானுல் முஸ்லிமீன் தலைமை வகித்த அரசுதான் அதற்கு லைஸன்ஸ் வழங்கியது என்பது கமிஷனின் வாதமாகும். இடதுசாரி கட்சியான தகமும் இஃவானுல் முஸ்லிமீனுக்கு எதிராக புகார் அளித்தது. 2011-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் முஹம்மது முர்ஸியை ராணுவம் சதிப் புரட்சி மூலம் வெளியேற்றியதை தொடர்ந்து பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனத்தை நிர்வாக நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
பின்னர் ஏராளமான இஃவான் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment