ஸ்ரீநகர்:எல்லைப்பாதுகாப்புப்படை(பி.எஸ்.எஃப்)யினர் நடத்திய அநியாய துப்பாக்கிச்சூட்டில் நான்கு கஷ்மீரிகள் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து உருவான மோதல் சூழல் நிலவும் கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களில் 2 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஸ்ரீநகரைத்தவிர புட்காம், கந்தர்பால், பந்திபுரா, சோபியான், புல்வாமா, குல்காம், அனந்தநாக், பிஜ்பிஹாரா, சோபோர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.
அதேவேளையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்று போலீஸ் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டாலும், தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்த முழு அடைப்பினால் கடைகள், வியாபார நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. வாகனங்கள் ஓடவில்லை.போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ராம்பானில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் பூட்ஸ் காலுடன் நுழைந்த பாதுகாப்பு படையினரை தடுக்க நடந்த முயற்சியால் ஏற்பட்ட மோதலில் பி.எஸ்.எஃப் படையினர் அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 4 கஷ்மீரிகளை கொன்றனர். இதனால் மக்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில் அட்டூழியம் புரிந்த ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். சேவ் இரோம் ஷர்மிளா கேம்பைன், மிஷன் பாரதீயம் ஆகிய அமைப்புகளின் தலைமையில் இப்போராட்டம் நடந்தது. ஐஸா, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேசன், ஜாமிஆ ஸ்டுடன்ஸ் சோலிடாரிட்டி, பி.யு.டி.ஆர் ஆகிய அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்றன.
No comments:
Post a Comment