புதுடெல்லி:தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியுள்ள நிலையில், பீகார் அரசியல் நிலவரம் எதிர்காலத்தில் தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் (தொலைத் தொடர்புத் துறை) அஜய் மக்கான் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:பீகார் அரசியல் நிலவரம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நீண்டகால அடிப்படையில் தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
ஐக்கிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ளுமா என்பது குறித்த கேள்விக்கு மக்கான் நேரடியாக பதில் அளிக்கவில்லை. எனினும், எதிர்காலத்தில் பீகார் அரசியலில் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும். நாட்டில் கூட்டணி அரசியல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எனவே, ஒத்த கருத்துடைய, மதச்சார்பற்ற கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும். இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை என மக்கான் தெரிவித்தார். அதேநேரம், கூட்டணி விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையிலான குழுதான் முடிவு செய்யும் என்றும் மக்கான் தெரிவித்தார். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கி வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு புறம் ராகுல் காந்தியின் முயற்சியால் காங்கிரஸ் கட்சி படிப்படியாக முன்னேறி வருகிறது. மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுருங்கி வருகிறது. வரும் மக்களவைத் தேர்தல் ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இடையிலான போட்டியாக அமையும் என்ற கருத்து தவறானது. காங்கிரஸ் சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி. எனவே, வரும் தேர்தலை குறிப்பிட்ட இருவருக்கும் இடையிலான போட்டியாகக் கருதக் கூடாது என்று மக்கான் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் போட்டி போடுவதற்கு முன்பு, மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை திரட்டட்டும். குறிப்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களின் கேள்விகளுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும். அதன் பிறகு கூட்டணிக் கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என மக்கான் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment