Thursday, February 14, 2013

போலி என்கவுண்டர் குற்றவாளிக்கு குடியரசு தலைவரின் போலீஸ் மெடல்!


Manipur policeman found guilty in fake encounter got medal on Republic Day
புதுடெல்லி:மணிப்பூரில் போலி என்கவுண்டரில் குற்றவாளி என்று நீதி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட நபருக்கு குடியரசு தலைவரின் போலீஸ் மெடல் கிடைத்துள்ளது.
2008-ஆம் ஆண்டு இரண்டு அப்பாவி இளைஞர்களை அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்துவிட்டு என்கவுண்டர் என்று நாடகமாடிய ஹவில்தார் ரேங்கில் உள்ள போலீஸ்காரன் என்.நுங்ஷி பாபு சிங், கடந்த குடியரசு தினத்தில் குடியரசு தலைவரிடமிருந்து கேலண்டரி மெடலை பெற்றுக்கொண்டார்.
2008-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி மணிப்பூரின் லம்பூயி லம்பி என்ற இடத்தில் நடந்த போலி என்கவுண்டரில் இம்பாலில் ரெஸ்டாரண்ட்(உணவு விடுதி) நடத்தும் ராஜேன் சிங்கும் அவரது உறவினர் ஹிரோஜித் சிங்கும் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டனர்.
நான்கு வயதான மகனின் காதுக்குத்தல் நிகழ்ச்சியின் வீடியோவை எடிட் செய்வதற்காக ராஜேன் சிங், ஹிரோஜித் சிங்குடன் பைக்கில் ஸ்டுடியோவுக்கு சென்றார் என்று ராஜேன்சிங்கின் மனைவி இபேச்சா தேவி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இருவரும் லாம்பூயி லம்பி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டதாக டி.வி சானல் மூலமாக இபேச்சா அறிந்தார்.
ஹிரோஜித்தின் தந்தை மறு நாளே டி.ஜி.பிக்கு புகார் மனுவை அளித்த பிறகு அவர் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. பின்னர் எதிர்ப்பை தொடர்ந்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் மணிப்பூர் கமாண்டோ எஸ்.ஐ அச்சவ்பா மீட்டியும், ரைஃபிள்மான் நுங்ஷி பாபு சிங்கும் இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக தெரியவந்தது.
ரோந்து சென்று கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய இளைஞர்களை தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியதாகவும், தாங்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று 2 சுட்டு வீழ்த்தினோம் என்றும், மீதமுள்ளவர்கள் தப்பிவிட்டதாகவும் போலீஸ் விளக்கமளித்தது.
ஆனால், இவ்விரு இளைஞர்களையும் எல்.எம்.எஸ் சட்டக்கல்லூரிக்கு அருகில் இருந்து பிடித்துச் சென்று லாம்பூயி லாம்பியில் வைத்து சுட்டுக்கொலைச் செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
போலி என்கவுண்டரில் குற்றவாளிகளான மணிப்பூர் போலீஸ்காரர்களுக்கு குடியரசு தலைவர் கேலண்டரி மெடல் வழங்கி ஊக்கமூட்டுகிறார் என்று மனித உரிமை ஆர்வலர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கிறது நுங்ஷி பாபு சிங்கிற்கு கிடைத்த போலீஸ் மெடல். ஆனால், இரண்டு ரவுண்ட் பரிசோதனை முடிந்த பிறகே மெடலுக்கு தகுதியானவர்களின் லிஸ்டை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிக் கொடுத்ததாக டி.ஜி.பி ஒய்.ஜாய்குமார் சிங் கூறுகிறார்.
வழக்கை குறித்து தனக்கு கூடுதலாக எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment