Monday, January 7, 2013

கடுமையான தண்டனையைக் காட்டிலும், உறுதியான தண்டனை கிடைக்கும் என்றால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும் – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி


வெங்கடாசலய்யா
பெங்களூர்:உறுதியாகத் தண்டனை கிடைக்கும் என்றால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா தெரிவித்தார்.
கர்நாடக நீதியியல் அகாடமி சார்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “பெண்கள் மீதான வன்முறை – பாலியல் பலாத்காரத்துக்கான முடிவு’ என்ற கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியது: தண்டனை குறித்த அச்சமில்லாததால், பெண்களை பலாத்காரம் செய்யும் அளவுக்கு ஒருவன் துணிகிறான். எனவே, கடுமையான தண்டனையைக் காட்டிலும், தண்டனை
உறுதியாகக் கிடைக்கும் என்றால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியும்.
பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைத்து, விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும். பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர் மரணம் அடையும் வரை காத்திருக்காமல், வழக்குகளை விரைவாக முடிப்பது நல்லது.
இதுபோன்ற வழக்குகளை போலீஸார் நேர்மையாக விசாரித்தால் மட்டும் போதாது. உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது.
பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம் இந்த பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான தொடர் விளைவுகளை உருவாக்க முடியும்.
அண்மையில் டெல்லியில் மாணவி மீதான பாலியல் பலாத்காரம் நமது அரசு நிர்வாகம் சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது. நீதிமன்றங்கள் சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கின்றன. சாட்சிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமே வழக்கை நேர்மையாக விசாரிக்க முடியும் என்றார் வெங்கடாசலையா. கருத்தரங்கில் கர்நாடக தலைமைச் செயலாளர் எஸ்.வி.ரங்கநாத், அகாடமி தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான என்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment