
டெல்லி:டெல்லி ‘பஞ்சாபி பாக்’ பகுதியில் ‘ப்ளூ லைன்’ பேருந்து குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தால் நிரபராதி என் விடுதலை செய்யப்பட்டார்.
1997 ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி டெல்லி ‘பஞ்சாபி பாக்’ பகுதியில் ‘ப்ளூ லைன்’ பேருந்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில், 4 பேர் பலியாயினர். இவ்வழக்கில் டெல்லி போலீசார் பாகிஸ்தானை சேர்ந்த ஜூல்பிகர் அலி என்ற முஹம்மத் ஹுசைனை கைது செய்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரித்த டெல்லி கீழ் நீதிமன்றம் 2004 அக்டோபர் 26ம் தேதி அன்று ஹுசைனுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை 2006 ஆகஸ்ட் 4ல் டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இவ்வழக்கில் மீண்டும் மறு விசாரணை நடத்த 2011 ஆகஸ்ட் 31 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரித்து வந்தது. இந்த மறு விசாரணையில் முஹம்மத் ஹுசைன் மீதான எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்த நீதிபதி ஹுசைனை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 15 ஆண்டு காலமாக சிறையில் இருந்த முஹம்மத் ஹுசைன் நிரபராதி என அடிஷனல் செஷன்ஸ் நீதிபதி பவன்குமார் ஜெயின் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் இலவச சட்ட உதவி வழங்கிய ராஜேஷ் ஆனந்தை நீதிபதி வெகுவாக பாராட்டினார். ஹுசைன் மீது வேறு வழக்குகள் இல்லையென்றால், அவர் உடனடியாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என உத்தவிட்ட நீதிபதி, 6 மாதகால இடைவெளியில், மேல் நீதிமன்றங்கள் மூலம் சம்மன் அளிக்கப்பட்டால், விசாரணைக்கு ஆஜராவேன் என உத்தரவாதம் அளிக்கும் வகையில், ரூ.10,000 க்கான உறுதி பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment