
மும்பை:இந்தியாவில் பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிரித்து வருவதற்கு பீகாரிகளே காரணம் என்றும் மகாராஷ்டிரா நவ நிர்மண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் இருக்கும் வட மாநில மற்றும் பீகாரிகளுக்கு எதிரான கருத்துகளைக் கூறி ராஜ் தாக்கரே பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற கொங்கன் பிராந்திய திருவிழாவின் பேரணியில் கலந்துகொண்டு பேசிய ராஜ் தாக்கரே, “சமீப காலமாக அனைவரும் டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பற்றியே பேசுகிறார்களே தவிர அந்த கொடூர குற்றத்தை செய்தது யார் என்பது பற்றி யாரும் பேசவில்லை. பீகார் மாநிலத்தவர்களுக்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக எனக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால், டெல்லியில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்பதை யாரும் கூற மறுக்கிறார்கள்.” என்றார்.
மேலும் “நாடு முழுவதுமே அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு பீகாரிகளே காரணம். வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்லும் இவர்கள்தான் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். மும்பையை போலவே கொங்கன் பிராந்தியத்திலும் வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால், கொங்கன் பிராந்தியம் முழுவதும் அடுத்த சில ஆண்டுகளில் வெளி மாநிலத்தவர்களுக்கு சொந்தமாகிவிடும். இதற்கு மேல் கொங்கனில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்குவதை எங்கள் கட்சி அனுமதிக்காது” என்றார்.
இதனிடையே ராஜ்தாக்கரேவின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ராஜ் தாக்கரே கருத்துக்கு பீகாரைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் கிரிராஜ் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை பரவச் செய்து அரசியலில் நிலைத்திருக்க முடியாது என்று கூறியுள்ள அவர், ராஜ் தாக்கரே கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பிழைப்புக்காக வேலை தேடி செல்லும் பீகார் மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசுவது ராஜ் தாக்கரேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வாடிக்கையாக ஆகி விட்டது. நாட்டில் எங்கு எந்த குற்றம் நடந்தாலும் அதனுடன் பீகார் தொழிலாளர்களை இணைத்துப் பேசுவது நல்லதல்ல. நாட்டின் நலனுக்கும் அது உகந்ததல்ல. இவ்வாறு பேசுவதை ராஜ் தாக்கரே நிறுத்தவேண்டும்” என்றார் லாலு.
No comments:
Post a Comment