
வியன்னா:அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கப்படும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் பரிசோதனை நடத்த ஈரான் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தலைவர் யூகியா அமானோ தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இவ்விவகாரத்தில் கருத்தொற்றுமை ஏற்பட்டதாக வியன்னாவில் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அமானோ தெரிவித்தார்.
பல்வேறு விவகாரங்களில் ஈரானுடன் கருத்துவேறுபாடு நிலவினாலும், அணுசக்தி நிலையங்களில் பரிசோதனை நடத்த ஈரான் அனுமதி அளித்திருப்பது நல்ல அறிகுறி என அவர் கூறினார்.
பாக்தாதில் ஈரானுடன் ஆறு பெரிய நாடுகள் அணுசக்தி விவகாரம் தொடர்பாக இன்று பேச்சு வார்த்தை நடத்தவிருக்கும் சூழலில் அமானோவின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அணுசக்தி நிலையங்களில் பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியதன் மூலம், இனி மாறவேண்டியது மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறைதான் என்பதை பாக்தா பேச்சுவார்த்தையில் ஈரான் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தடையை மேலும் தீவிரப்படுத்தக் கோரும் மசோதாவை அமெரிக்க செனட் நிறைவேற்றியுள்ளது. ஒருதலை பட்சமாக தடை விதிப்பதை நிறுத்தவேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துவரும் வேளையில் அமெரிக்கா இத்தகைய அடாவடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment