
மட்டக்களப்பு:இலங்கை மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடி பகுதியில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகம் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அலுவலகத்தை இன்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் திறந்து வைக்கவிருந்தார். தீவைப்புச் சம்பவத்தால் அலுவலகத்தின் முன் பக்கம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறலாம் என கருதப்படும் சூழ்நிலையில்,அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகம் அமைத்து தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
தீவைப்புச் சம்பவம் தொடர்பாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம் முபீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் குறித்து தாம் யாரையும் சந்தேகிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்த முற்படும் தீய சக்தியின் செயலாகவே இதனைத் தாம் கருதுவதாகவும்’ தெரிவித்துள்ளார்.
அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட போதும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் இன்று காத்தான்குடி பிரதேசத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தின் திரையரங்கு மர்மமான முறையில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment