
டமாஸ்கஸ்:ஐ.நா கண்காணிப்பாளர்களின் தலையீட்டை புஸ்வாணமாக்கிய சிரியாவின் சர்வாதிகார பஸ்ஸார் அரசு சுதந்திரம் கோரி போராடும் மக்களை கொன்று குவிக்கும் கோரத்தாண்டவத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.
வெள்ளிக்கிழமை அதிகார வெறிப்பிடித்த பஸ்ஸாரின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.
எதிர்ப்பாளர்களுக்கு செல்வாக்கு மிகுந்த நகரமான ஹிம்ஸின் அருகில் உள்ள ஹவ்லா இரத்தக் களறியாக மாறியுள்ளது. இங்கு மட்டும் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹவ்லாவில் 110 பலியானதாக லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பான சிரியன் ஹியூமன் ரைட்ஸ் அப்ஸர்வேட்டரியின் செய்தி தொடர்பாளரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
பலியானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் ஆவர். இச்சம்பவத்தை ஐ.நா கண்டித்துள்ளது. ஹவ்லா துயரச் சம்பவத்தின் பின்னணியில் ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என சிரியா நேசனல் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளிக்கிழமை சிரியாவின் இதர பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 20 பேர் கொல்லப்பட்டனர். சிரியா பிரச்சனைக்காக மத்தியஸ்தராக இருந்து வரும் கோஃபி அன்னன் அடுத்த வாரம் சிரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழலில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ஹவ்லாவில் வெள்ளிக்கிழமை துவங்கிய குண்டுவீச்சு நேற்று தொடர்ந்தது என செய்திகள் கூறுகின்றன. சிரியாவின் புரட்சி ராணுவப் படையான ஃப்ரீ சிரியன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் ஹவ்லா உள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.
போராட்டங்களில் ஐ.நாவின் மெளன மனோபாவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ‘ஐ.நா சுற்றுலா பயணிகளே! வெளியேறுங்கள்!’ என்ற முழக்கங்களை எழுதிய பேணர்களை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.
சிரியாவில் பஸ்ஸாரின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள இயலாது என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் சமாதான முயற்சிகளை சிரியா ராணுவம் ஒவ்வொரு நாளும் சீர்குலைத்து வருவதாக மூன் தெரிவித்தார்.
புரட்சிகர ராணுவத்தினரின் செயல்பாடுகளையும் விமர்சித்த மூன், நாட்டின் பல பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் செல்வது நல்லதல்ல என கூறினார்.
No comments:
Post a Comment