
வாஷிங்டன்:வியட்நாம் போரின் இறுதிக்கட்டங்கள் குறித்து செய்திகளை சேகரித்து வாசகர்களுக்கு அளித்த பிரபல பத்திரிகையாளர் ஜார்ஜ் எஸ்பர் மரணமடைந்தார். நோய்வாய்ப்பட்டிருந்த 79 வயதான எஸ்பர் தனது பத்திரிகைப் பணியின் பெரும்பாலான காலத்தை அசோசியேட் ப்ரஸ்ஸிற்காக செலவழித்தார்.
வியட்நாம் போரின் இறுதி கட்டத்தில் கம்யூனிஸ்ட் போராளிகள் தெற்கு வியட்நாம் தலைநகரான ஸைகோனை கைப்பற்றிய செய்தியை 1975-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி அசோசியேட் ப்ரஸ்ஸிற்காக ரிப்போர்ட் செய்தார். எஸ்பரின் செய்தி நியூயார்க் டைம்ஸில் தலைப்பு செய்தியாக வெளியானது.
வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என்ற அமெரிக்காவின் உத்தரவை புறக்கணித்து, வியட்நாமில் இருந்து செய்தி சேகரித்த எஸ்பர் எல்லா தினங்களிலும் ரிப்போர்ட்டுகளை அளித்துக் கொண்டிருந்தார். எஸ்பர் அளித்த செய்திகள் மூலமாக வியட்நாம் போரின் உண்மை நிலையை குறித்து உலகம் அறிந்தது.
வியட்நாம் போர், 1978-ஆம் ஆண்டில் கயானா கூட்டுப் படுகொலை, 1991-ஆம் ஆண்டு வளைகுடா போர் ஆகிய நிகழ்வுகளிலும் எஸ்பர் செய்தி சேகரித்தார். 42 ஆண்டுகால பத்திரிகை பணியை நிறுத்திவிட்டு கடந்த 2000-ஆம் ஆண்டு அசோசியேட் ப்ரஸ்ஸிலிருந்து ஓய்வு பெற்ற எஸ்பர், பின்னர் மேற்கு வெர்ஜினியா பல்கலை கழகத்தில் ஜர்னலிஸம் துறையில் பேராசிரியராக பணியாற்றினார். எஸ்பர் தீரமிக்க பத்திரிகையாளராக திகழ்ந்தார் என அசோசியேட் ப்ரஸ் எக்ஸ்க்யூடிவ் எடிட்டர் காதலீன் காரோல் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment