Tuesday, February 10, 2015

ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. பயங்கர மோதல் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கல் வீசி தாக்கிக்கொண்டனர்.

தேர்தல் பிரசாரம்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் 13-ந் தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் வீதி, வீதியாக வாக்கு கேட்டு வருகின்றனர்

.

பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியம் நேற்று காலை ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்திற்கு இருபுறமும் பா.ஜ.க.வினர் சென்று கொண்டிருந்தனர்.

அ.தி.மு.க-பா.ஜ.க. மோதல்

மேலத்தெருவில் பா.ஜனதாவினர் பிரசாரம் செய்ய சென்றபோது, அங்கு ஏற்கனவே அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பா.ஜ.க.வினரும் வந்ததால் அ.தி.மு.க.வினர், அவர்களிடம் இரண்டு விரலை உயர்த்தி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். அ.தி.மு.க.வினரின் செயலை பா.ஜ.க.வினர் கிண்டல் செய்தனர். அப்போது பா.ஜ.க. பிரசார வாகனத்தின் மைக்கை அ.தி.மு.க.வினர் பிடுங்கி இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டனர். இதனால் பா.ஜ.க.வினர் கோபமடைந்து தட்டிக்கேட்டனர்.

இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பார்த்திபன், கோவிந்தன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்து, இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

சாலை மறியல்

போலீசார் விரைந்து வந்து இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போதும் கல்வீச்சு நடந்தது. இதில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. கூடுதல் போலீசார் அங்குவந்து இரு கட்சியினரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் சில பெண் போலீசார் சிக்கி தவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். மோதலில் இரு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் செல்போன் மூலம் பா.ஜ.க. வேட்பாளர் சுப்ரமணியத்திடம் பேசி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்னரே பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment