Saturday, February 14, 2015

கச்சா எண்ணெய் பேரல் 60 டாலரை தாண்டியது !!!

புதுடெல்லி : சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் மாதத்துக்கு முன்பு 115 அமெரிக்க டாலராக இருந்தது. இது பின்னர் படிப்படியாக சரிந்து கடந்த ஜனவரியில் ஒரு பேரல் 45.19 டாலராக வீழ்ச்சி அடைந்தது. இது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியாகும். இந்நிலையில் நேற்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் திடீரென உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பேரல் 60 அமெரிக்க டாலரை தாண்டியது. முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.
இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் வள நாடுகள் உற்பத்தியை குறைத்ததுதான் காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 3ம் தேதி பெட்ரோல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.50ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.43ம் குறைக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு,  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. உண்மையில் இந்த மாதத்தில் விலை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், டெல்லி சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு விலை குறைப்பு அறிவிப்பு செய்ய வைத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அதே நேரத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து 4 முறை  உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக பெட்ரோலுக்கு லிட் டருக்கு ரூ.7.75ம், டீசலுக்கு ரூ.7.50ம் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி வரி உயர்வு இல்லாமல் இருந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக குறைந்திருக்கும். தற்போது கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை தற்போது உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இது சாத்தியமில்லாத பட்சத்தில், மத்திய அரசு விலை உயர்வை சரிக்கட்ட வரி குறைப்பு அறிவிப்பு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment