அதிராம்பட்டினம், ஜன. 29–
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சத்திரம் தொக்காளிகாடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவர் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில் உள்ள சொந்த வயலில் சாகுபடி செய்துள்ளார்.
இவர் வயலுக்கு சென்ற போது வயலில் சிறுத்தை நடமாடுவதை பார்த்ததாக மற்ற விவசாயிகளிடம் கூறி உள்ளார். இதனால் மற்ற விவசாயிகள் அச்சத்தில் வயலுக்கு செல்லவில்லை.
இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பட்டுக்கோட்டையில் இருந்து வன காப்பாளர்கள் ராமச்சந்திரன், கணபதி செல்வம், அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
விவசாயி செந்தில்குமாரிடமும் விசாரித்தனர் அப்போது அவர் வயலுக்கு சென்ற போது உருமல் சத்தம் கேட்டதால் அங்கு சென்று பார்த்தேன். அப்போது ஒரு சிறுத்தை ஓடியது. இதனை பார்த்ததும் நான் பயந்து ஓடி விட்டேன்.
கடந்த 3 நாட்களாக வயல்களில் கொக்கு, மயில் போன்றவை இறந்து கிடந்தது. இதனால் வனத்துறைக்கு தகவல் கொடுத்தோம் என்றார்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறுகையில், நமது பகுதிக்கு சிறுத்தை புலி வராது. அருகில் அலையாத்தி காடுகள் உள்ளதால் வேறு வன விலங்காக இருக்கலாம். அதாவது காட்டு பூனையாக இருக்கலாம். காட்டு பூனை யாரையும் ஒன்றும் செய்யாது. எனவே விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.
No comments:
Post a Comment