உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தியாக அப்துல்லாஹ் அவர்கள் இன்று மரணமடைந்து விட்ட செய்தி சவூதி மக்களுக்கு மட்டுமின்றி உலக முஸ்லிம்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
செல்வ வளம் மிகுந்த ஒரு நாட்டின் மன்னர் என்பதை விட உலக முஸ்லிம்களின் புனித ஸ்தலமான மக்கா மதினா ஆகியவற்றின் பராமரிப்பாளர் என்ற அளவில் சவூதி அரசருக்கு உலக அரங்கில் சிறப்பிடம் உண்டு. தனது வாழ்நாளில் பல முன்னேற்ற பணிகளை முடுக்கி விட்டு சவூதி மிகச் சிறந்த இடத்தை உலக அளவில் பெறுவதற்கு இவரின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது.
அரசர் அப்துல்லாஹ் அவர்கள் இந்திய திருநாட்டின் நட்பினை உயர்வாக கருதினார், இந்திய பயணத்தின் போது இந்தியாவை தன்னுடைய மற்றொரு தாய் வீடு என்று நெஞ்சம் நெகிழ கூறினார்.
மன்னராக பொறுப்பேற்ற தம்முடைய 10 ஆண்டுகால ஆட்சியில் அமைதி வாழ்கையை மக்களுக்கு வழங்கி சவூதியின் தரத்தை உலக அரங்கில் பிரதிபலித்து முத்திரை பதித்தார்.
மேலும் பாலஸ்தீனம், சோமாலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு வாரி வாரி வழங்கிய கருணை உள்ளம் கொண்ட வள்ளலாக திகழ்ந்தார்.
உலக சமாதானத்திற்கும் மன்னர் அப்துல்லாஹ் பெரும் முயற்சியை மேற்கொண்டார்.
இவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு தலைவர் இறந்துள்ளார். ஆனால் சவூதியில் அன்றாட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஊரைப் போல் கடைகள் அடைக்க நிர்பந்திக்கப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் எந்த பயமும் இன்றி வழமைபோல் செல்கின்றன. மொத்தத்தில் இவரது இழப்பு சவூதியின் அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
எல்லோருக்கும் எங்கு இறப்புக்கான தொழுகை நடைபெறுமோ அந்த இடத்தில் இவருக்கும் தொழுகை நடத்தப்படும்.
எல்லோரையும் புதைக்கக் கூடிய பொது மையவாடியில் இவரது உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் எந்த கட்டிடங்களும் கட்டப்படாது.
வெறும் மண்ணைக் கொண்டு இவரது உடல் மூடப்படும். இறப்புக்கு முன்னால் தான் அவர் சவூதியின் மன்னர். இறப்புக்கு பின்னால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன்தான். அதனை செயலில் காட்டி வருகின்றனர் சவூதி ஆட்சியாளர்கள்.
அப்துல்லாஹ்வின் மரணத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment