Tuesday, January 20, 2015

பேராவூரணி-சுப்பம்மாள்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

மீன் வாங்க சென்றனர்

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் செல்வராசு(வயது41). இவருடைய அண்ணன் மகன் குமார்(32). இவர்கள் இருவரும் மீன் வாங்குவதற்காக கட்டுமாவடிக்கு சென்றனர். அங்கு மீன்களை வாங்கி கொண்டு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பேராவூரணி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். அப்போது மதுக்கூரை சேர்ந்த கலைமணி என்பவர் கட்டுமாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

கிழக்குகடற்கரை சாலையில் உள்ள சுப்பம்மாள்சத்திரம் அருகே சென்ற போது திடீரென குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், கலைமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் குமார், செல்வராசு, கலைமணி ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த செல்வராசு, கலைமணி ஆகிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராசு இறந்தார். தொடர்ந்து கலைமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment