Friday, March 14, 2014

போராளிகள் படுகொலை: பதிலடியை தீவிரப்படுத்திய ஃபலஸ்தீன்!

download (1)
காஸ்ஸா/டெல் அவீவ்: போராளி இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதின் 3 உறுப்பினர்களை ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்த இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி தாக்குதல்களை ஃபலஸ்தீன் அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இஸ்ரேல் நகரங்களான அஷ்கலோன் மற்றும் அஷ்தோத் ஆகிய இடங்களில் நேற்று ராக்கெட்டுகள் தாக்கின. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ராக்கெட்டுகள் விழுந்ததால் ஆள் அபாயம் ஏதுமில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
புதன்கிழமைக்குப் பிறகு 90 ராக்கெட்டுகளை இஸ்ரேலை இலக்காக வைத்து செலுத்தியதாக இஸ்லாமிக் ஜிஹாத் தலைவர்கள் தெரிவித்தனர். 2012-ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு முதன் முறையாக ஃபலஸ்தீன் – இஸ்ரேல் இடையே பரஸ்பரம் கடுமையான தாக்குதல்கள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

2012-ஆம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவ டாங்குகள் காஸ்ஸா எல்லையை நோக்கி நகருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காஸ்ஸா எல்லையை மூடியதாக இஸ்ரேலின் போர் அமைச்சர் மோசே யாலோன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காஸ்ஸாவில் 3 இஸ்லாமிக் ஜிஹாத் உறுப்பினர்களை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி கொலை செய்ததன் மூலம் புதிய பிரச்னைகள் உருவாகின. இஸ்ரேல் மக்கள் வாழும் பகுதிகளில் ராக்கெட் தாக்குதலை நடத்தி ஃபலஸ்தீன் போராளிகள் பதிலடி கொடுத்தனர். பதிலடியைத் தொடர்ந்து காஸ்ஸாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இஸ்ரேல் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஃபலஸ்தீன் குற்றம் சாட்டியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு கடுமையான பதிலடியை அளிப்போம் என்று அல் குத்ஸ் பிரிகேடியர் அமைப்பு எச்சரித்துள்ளது.
போர் ஏற்பட்டால் இஸ்ரேல் துக்கத்தை சந்திக்க வேண்டி வரும் என்றும், ஃபலஸ்தீன் மக்களுக்கு தற்காப்புக்கான உரிமை உண்டு என்றும் ஹமாஸின் செய்தி தொடர்பாளர் இஹாத் அல் காஸின் தெரிவித்தார்.
மோதல் முற்றியதை தொடர்ந்து இரு பிரிவினரும் வாபஸ் பெறவேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment