
புதுடெல்லி: காலிஸ்தான் இயக்க உறுப்பினராக கருதப்படும் தேவிந்தர் சிங்புல்லரின் தூக்கு தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.கைதியின் மன நிலை மற்றும் கருணை மனுவைப் பரிசீலித்ததில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றைக் கருதி, மரண தண்டனைக் குறைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, புல்லரின் தூக்கு தண்டனையைக் குறைக்குமாறு அவரது மனைவி தாக்கல் செய்திருந்த மனுவைப் பரிசீலிப்பது என்று தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
முன்னதாக, புல்லரின் மனைவி சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ்.துளசி, “”புல்லர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவரது மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்”என்று கோரினார்.
அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இவ்விவகாரத்தை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தனர். புல்லரின் தூக்கு தண்டனையைக் குறைக்க முடியாது என்று 10 மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கடந்த 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். அப்போதைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.பிட்டா உள்பட 25 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்காக புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment