Saturday, January 18, 2014

ஈரானுடன் இடைக்கால ஒப்பந்தம்: அமலாக்க விபரங்கள் வெளியீடு!

iran
வாஷிங்டன்: அணுசக்தி தொடர்பாக ஈரான் நாட்டுடன் செய்துள்ள ஆறு மாதங்களுக்கான இடைக்கால ஒப்பந்த அமலாக்கம் குறித்த விவரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த இடைக்கால ஒப்பந்தத்துடன், மேலும் ஒருரகசிய ஒப்பந்தத்தை ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுக்கும் விதமாக இந்த அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், ஈரானின் அணுசக்தி நிலையங்களில் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அமைப்பு (ஐ.ஏ.ஈ.ஏ) ஆய்வு மேற்கொள்வதற்கான கால அட்டவணை உள்பட ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அராக் அணு உலையில் நடைபெற்று வரும் யுரேனியம் செறிவூட்டும் பணிகள் உள்பட ஈரானின் அனைத்து அணுசக்தி திட்டங்களின் தற்போதைய நிலவரத்தை ஐ.ஏ.ஈ.ஏ. ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு ஈரான் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஐ.ஏ.இ.ஏ. அறிக்கை சமர்ப்பிக்கும். 20 சதவீதத்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை நிறுத்துவது,அதற்கான உபகரணங்களை செயலிழக்கச் செய்வது உள்பட ஈரானின் பல்வேறு நடவடிக்கைகளை ஐ.ஏ.இ.ஏ. கண்காணிக்கும். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் கழித்து ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையில் முதல் முறையாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தனது அணுசக்தி பரிசோதனைகளின் பிரச்னைக்குரிய அம்சங்களை நீக்குவதற்கும், இதுவரை இல்லாத அளவுக்கு சர்வதேச ஆய்வுக் குழுவை அணுசக்தி நிலையங்களில் அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment