துனீஸ்: நாட்டின் புதிய அரசியல் சாசனத்திற்கு துனீசிய பாராளுமன்றம்(தேசியஅவை) அங்கீகாரம் வழங்கியுள்ளது.அரபு, ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக புரட்சி போராட்டம் வெற்றிகரமாக முடிந்த துனீசியாவில் புரட்சி போராட்டத்தின் 3-வது ஆண்டு நினைவு தின வேளையில் அரசியல் சாசனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களாக நீடித்த விவாதங்களுக்கு பிறகு அரசியல் சாசனத்தின் அனைத்து பிரிவுகளையும் நேற்று தேசிய அவை அங்கீகரித்தது.
பூரண அங்கீகாரத்திற்காக அரசியல் சாசனத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கும். கடைசி லட்சியத்தை அடைந்துவிட்டதாக சபாநாயகர் முஸ்தஃபா பின்ஜஃபர் தெரிவித்தார். தேசிய அவையில் 3 இல் இரண்டு பகுதி பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே அரசியல் சாசனம் அமலுக்கு வரும்.அவையில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சர்வாதிகாரி ஸைனுல் ஆபிதீன் பின் அலியை ஆட்சியில் இருந்து அகற்றிய பிறகு அதிகாரத்திற்கு வந்த இஸ்லாமி கட்சியான அந்நஹ்ழாவிற்கும், கம்யூனிச எதிர்கட்சிக்கும் இடையே நிலவிய கருத்துவேறுபாடு காரணமாக அரசியல் சாசனம் தாமதமானது. சில மாதங்களுக்கு முன்பு அரசுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரசியல் சாசனத்தின் வரைவு பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. புதிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் துனீசியாவில் தேர்தல் இவ்வாண்டு நடைபெறும். உலகிலேயே மிகச்சிறந்த அரசியல் சாசனம் என்று அந்நஹ்ழாவின் தலைவர் டாக்டர் ராஷித் அல் கன்னோஷி தெரிவித்தார்.
No comments:
Post a Comment