Wednesday, January 22, 2014

போராளிகளின் உடல்களை திரும்ப அளிக்கிறது இஸ்ரேல்!


funeral-ராமல்லா: எதிர்ப்பு போராட்டத்தில் வீர மரணம் அடைந்த ஃபலஸ்தீன் போராளிகளின் உடல்களை இஸ்ரேல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி தலைமையில் நடந்த ஃபலஸ்தீன் -இஸ்ரேல் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் வீர மரணம் அடையும் ஃபலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் தடுத்துவைப்பது வழக்கம்.எண்களின் அடக்கஸ்தலம் என்று அழைக்கப்படும்
தனியான ஒரு இடத்தில் உடல்கள் பாதுகாக்கப்படும். ஆட்களின் பெயருக்கு பதிலாக எண்களிட்டு உடல்களை பாதுகாப்பதால் இப்பெயர் வந்தது. இதில் பல உடல்களும் மக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
36 போராளிகளின் உடல்கள் மட்டுமே கிடைக்கும் என்றும், அவை கிடைத்தவுடன் மார்க்க சடங்குகள் செய்யப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்படும் என்றும் இறந்த உடல்களை மீட்பதற்காக பிரச்சாரம் நடத்தும் ஃபலஸ்தீன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேற்கு கரையில் உள்ள ஜனீன் பகுதியில் வசித்தவர்களின் உடல்கள் திரும்பி அளிக்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இறந்த உடல்களை திருப்பி அளிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி இஸ்ரேல் ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த மஜ்தி அப்துல் ஜவ்வாத் கன்ஃபரின் உடல் நேற்று முன் தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்த உடலை பெறுவதற்காக கன்ஃபரின் உறவினர்களும், அரசு பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.

No comments:

Post a Comment