Tuesday, November 26, 2013

ஐந்து வருடங்களில் 11,820 கஸ்டடி மரணம்!


custodyபுதுடெல்லி: இந்தியாவில் கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருகின்றன. கஸ்டடி மரணங்களை தடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரைவாக விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 11,820 பேர் போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை அமிக்கஸ் க்யூரி எம்.எம். சிங்க்வி நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து நீதிபதி எஸ்.எஸ். நிஜ்ஜார் தலைமையிலான பெஞ்ச் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

கஸ்டடியில் துன்புறுத்தப்படுவது தொடர்பாக 2007-08 ஆண்டில் 3,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமிக்கஸ் க்யூரி சுட்டிக்காட்டினார். கஸ்டடியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2006-2010 காலக்கட்டத்தில் 39 வழக்குகளை தேசிய மனித உரிமை கமிஷன் பதிவு செய்துள்ளது.
2007-09 காலக்கட்டத்தில் மஹராஷ்ட்ராவில் 72 பேர் கஸ்டடியில் மரணமடைந்துள்ளார்கள். இதில் பெரும்பாலோர் பெண்களாவர். ஆனால், நான்கு சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகளான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2011-12 காலக்கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமை கமிஷன் 94,985 வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று அமிக்கஸ் க்யூரி சுட்டிக்காட்டினார். இதில் பாதியும் உத்தர பிரதேச மாநிலத்திலாகும். இதற்கு அடுத்து டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தேசிய மனித உரிமை கமிஷனின் தலைமையகம் டெல்லியில் இருந்தாலும், அம்மாநிலத்திற்கு என்று தனியாக மனித உரிமை கமிஷன் வேண்டும் என்று அமிக்கஸ் க்யூரி கோரிக்கை விடுத்தார்.
வடகிழக்கு மாநிலங்களில் சித்திரவதையும், படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ளதாக அமிக்கஸ் க்யூரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment