Tuesday, July 2, 2013

குஜராத்தில் பா.ஜ.கவுக்கு முஸ்லிம் தலைவர்கள் தேவையாம்!

புதுடெல்லி:குஜராத்தில் பா.ஜ.கவின் சிறுபான்மை மோர்ச்சா அமைப்புக்கு தலைவர்களை தேடி அக்கட்சி அலைந்துகொண்டிருக்கிறது. எவ்வகையிலாவது முஸ்லிம்களை சமரசம் செய்து சர்வதேச அளவில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையால் இழந்துபோன தனது பிம்பத்தை சரிச்செய்ய மோடி நடத்தி வரும் கடுமையான முயற்சிகளுக்கு பின்னடைவாக சிறுபான்மை மோர்ச்சாவின் தலைவராக இருந்த காதர் ஸாலோடு என்பவர் கடந்த மாதம் இறந்துபோனார். இதனால் அனாதையாக்கப்பட்ட சிறுபான்மை மோர்ச்சாவின் செயல்பாடுகள் முடங்கிப்போய்விட்டது.

முஸ்லிம்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை திட்டமிடும் வேளையில் சிறுபான்மை மோர்ச்சாவுக்கு தகுதியான நபர் கிடைக்காதது சோர்வடையச் செய்யும் என்று மோடியின் விளம்பர மேலாளர்கள் கணக்குப்போடுகிறார்கள். குஜராத்தின் வளர்ச்சியும்(?), குஜராத் முஸ்லிம்களின் வளர்ச்சியும்(?) நாடு முழுவதும் கொண்டு செல்லும் திறன் கொண்ட முஸ்லிம் தலைவரைத்தான் மோடியின் மேலாளர்கள் தேடி வருகின்றார்கள்.
தனது துதிபாடிகளான சில முஸ்லிம்கள் குஜராத்தில் இருந்தாலும், மோடியை அங்கீகரிக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் யாரும் குஜராத்தில் இல்லை என்பது புதிய சூழலில் மோடியை கவலைப்பட வைத்துள்ளது. மறைந்த காதர் ஸாலோட்டிற்கும் முஸ்லிம் மக்களிடையே ஆதரவு கிடையாது.
2011-ஆம் ஆண்டு முஸ்லிம்களை திரட்ட மோடிக்காக நடத்திய ஸத்பாவனா மிஷன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிறுபான்மை மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் மெஹ்பூபலி பாவாவை திரும்பவும் கொண்டுவருவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. தற்போது மெஹ்பூபலி பாவா, சிறுபான்மை மோர்ச்சாவின் தேசிய செயலாளர் ஆவார். அவரை தேசிய தலத்தில் இருந்து குஜராத்திற்கு கொண்டுவந்தால், அம்மாநிலத்தில் மோடிக்கு ஆதரவான ஒரு முஸ்லிம் தலைவர்களும் இல்லை என்று தேசம் முழுக்க தெரியவந்துவிடும் என்ற பயமும் மோடியின் விளம்பர மேலாளர்களுக்கு உண்டு. மேலும் தேசிய அளவில் ஒரு முஸ்லிம் தலைவரை(?) இழக்கவேண்டிய நிலை ஏற்படும்.
தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்ட்ரா பகுதிகளில் மோடிக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் சில முஸ்லிம் தலைவர்கள்(?) இருந்தாலும் கூட குஜராத்தின் இதர பகுதிகளில் சிறுபான்மை மோர்ச்சாவில் கூட இவர்களுக்கு ஆதரவு கிடையாது. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆஸிஃபா கானை கொண்டுவந்தால் என்ன? என்பதுக் குறித்த ஆலோசனையும் மோடியின் மேலாளர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், அஹ்மதாபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க டிக்கெட்டில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆஸிஃபா கான், எவ்வாறு மோடி விரும்பும் முஸ்லிம் தலைவராக மாறுவார் என்பது கேள்விக்குறியே!குஜராத் சிறுபான்மை ஃபினான்ஸ் போர்ட் தலைவர் இம்தியாஸ் கான் படானும், இவர்களது பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
கூடுதலாக முஸ்லிம் தலைவர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுச்செய்து தேடுதல் வேட்டையில் மோடியின் மேலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment