பீகாரில் மதிய உணவில் நச்சு காரணமாக பள்ளிக் குழந்தைகள் 27 பேர் மரணமுற்ற துயரச்சம்பவம் பாஜக-ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினரின் அரசியல் சதிச் செயலாக இருக்கலாம் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட்டத்தை முதல்வர் நிதிஷ் குமார் கூட்டி ஆலோசனை நடத்திப் பேசுகையில், "சரண் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த வாரம் மதிய உணவில் விஷம் கலந்த நிலையில், அதைச் சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் பலியாகினர். இந்தத் துயரச் சம்பவத்தில், மதிய
உணவில் பூச்சிக்கொல்லி மருந்தின் (‘மோனோக்ரோடபஸ்’ என்ற ரசாயனம்) படிமங்கள் இருந்ததை தடய அறிவியல் பரிசோதனைக்கூட ஆய்வில் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் இருந்திருக்கக்கூடும் என்ற நமது அச்சத்தை அது உறுதி செய்துள்ளது" என்றார்
அவர் மேலும் கூறுகையில், "புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் சரி, பள்ளிக்கூட துயரச் சம்பவத்திலும் சரி, பாரதீய ஜனதா கட்சிக்கும், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருந்தது தெளிவாக தெரிகிறது. இந்த சம்பவங்களை தொடர்ந்து இவ்விரு கட்சிகளும் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்ததே இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது" என்றார்.
"ஐக்கிய ஜனதா தளத்துடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர் பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்தை இழந்ததில் நிலை குலைந்து போய் உள்ளது. எனவே அந்தக் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து எனது அரசை குலைப்பதற்குத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் எனது பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து விலகி செல்ல மாட்டேன். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்குத் தான் மக்கள் எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினார்கள். அந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து நடை போடுவோம்." என்றும் முதல்வர் நிதீஷ் குமார் கூறினார்.
No comments:
Post a Comment