சேலம்:தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஹிந்துத்துவா அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே அரசு பேருந்துகள் உள்ளிட்டவை கல்வீச்சில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை (22/07/2013) தமிழகம் தழுவிய முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அரசு சேலம் பா.ஜ.க அலுவலகம் அருகே மர்ம நபர்கள், ஆடிட்டர் ரமேஷை (வயது 52) வெட்டிக்கொலைச் செய்தனர். குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு வாகனத்தை நிறுத்துவதற்காக ரமேஷ், கட்சி அலுவலகத்திற்கு வரும் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டு தடவை கட்சியின் மாநில பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரமேஷ், சென்னை போர்ட் ட்ரஸ்டியாகவும் உள்ளார். 1990 களில் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். சேலம் மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் கொல்லப்படும் சங்க்பரிவாரின் மாநில அளவிலான நான்காவது தலைவர் ரமேஷ் ஆவார். கடந்த அக்டோபர் மாதம் கட்சியின் மருத்துவ அணி செயலாளர் டாக்டர் வி.அரவிந்த், வேலூரில் அவருடைய க்ளீனிக் முன்பாக கொலைச் செய்யப்பட்டார். இம்மாதம் துவக்கத்தில் ஹிந்துமுன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் கொல்லப்பட்டார்.
ரமேஷின் கொலையைத் தொடர்ந்து சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கலவர சூழல் நிலவுகிறது. ரமேஷ் படுகொலையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை உடனடியாக கைதுச் செய்யக்கோரி பா.ஜ.க தொண்டர்கள் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல இடங்களிலும் சங்க்பரிவார்கள் வன்முறையை கட்டவிழித்துவிட்டுள்ளனர். அரசு வாகனங்கள் தாக்கப்பட்டு பேருந்துகள் தீக்கிரையாகின. மோதல் சூழலால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறுச் செய்த பா.ஜ.க தொண்டர்களை திருப்பூரிலும், கும்பகோணத்திலும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
ரமேஷின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதும் அரசு அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டுகிறார். குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன்னால் கொண்டுவரவேண்டும் என்று பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சார கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். ரமேஷின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது. உடலில் 17 வெட்டுக்காயங்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவுச் செய்து விசாரணையை துவக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஜெயலலிதா அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment