Tuesday, January 8, 2013

ஜார்க்கண்ட் பா.ஜ.க அரசு கவிழுகிறது!



ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க அரசுக்கான ஆதரவை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாபஸ் பெற்றுள்ளது. இதனால் பா.ஜ.க. அரசுக்கு அங்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அர்ஜுன் முண்டா அரசு பெரும்பான்மையை இழந்து கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தற்போது எங்களுக்கு முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து பா.ஜ.க. பின்வாங்குவதை அடுத்து அர்ஜுன் முண்டா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சித் தலைவர் சிபு சோரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை செவ்வாய்க்கிழமை மாநில ஆளுநர் செய்யத் அஹ்மதிடம் அளிக்க உள்ளோம். இனி சமரசத்துக்கே இடமில்லை என்றும் சிபு சோரன் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக-ஜே.எம்.எம் கூட்டணி ஆட்சியில் உள்ளது. 82 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 18 எம்.எல்.ஏ.க்களும், ஜே.எம்.எம். கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்க எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர், சுயேச்சைகள் 2 பேர் மற்றும் வாக்குரிமை பெற்ற ஒரு நியமன எம்.எல்.ஏ., பாஜக அரசுக்கு ஆதரவளித்து வந்தனர்.
சுழற்சி முறையில் 28 மாதங்கள் பாஜகவும், 28 மாதங்கள் ஜே.எம்.எம். கட்சியும் ஆள்வது என ஒப்பந்தம் உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 10ஆம் தேதி, பாஜகவுக்கான ஆட்சிக் காலம் முடிவடைவதால், சுழற்சி முறை
அதிகாரப் பகிர்வு குறித்து சிபுசோரனின் மகனும், துணை முதல்வருமான ஹேமந்த் சோரன் முதல்வர் அர்ஜுன் முண்டாவுக்கு கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு அர்ஜுன் முண்டா உடன்படவில்லை. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் அப்படியொரு உடன்பாடு ஏதும் இல்லை என்றும் அவர் கூறிவந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, “அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து விரைவில் முக்கிய முடிவெடுக்கப்படும்” என்று ஜே.எம்.எம். கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செயற்குழு கூடி ஆலோசனை நடத்திய பிறகு, ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: “ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் உள்பட பல்வேறு நபர்களுடனும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளுக்குப் பின், பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கட்சியின் ஒருமித்த முடிவாகும்.
சாந்தல் பர்கானா பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., எங்கள் கட்சி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறார். கூட்டணியில் சரியான ஒத்துழைப்பு இல்லை.
பாஜக, அர்ஜுன் முண்டாவை தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, சுழற்சி முறையில் ஆட்சி என்பதை அறிவிக்க வேண்டும் என்றார் ஹேமந்த் சோரன்.
மற்ற கட்சிகளின் பலம்: எதிர்க்கட்சியான காங்கிரஸ் வசம் 13 எம்.எல்.ஏ.க்களும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) 11, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மார்க்சிஸ்ட் ஒத்துழைப்புக் கட்சி, ஜார்க்கண்ட் கட்சி (எக்கா), ஜார்க்கண்ட் ஜந்திகர் மஞ்ச், ஜெய்பாதர் சம்தா கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.வும், ஒரு சுயேச்சையும் உள்ளனர். இதனிடையே காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியை அமைக்க ஜே.எம்.எம். கட்சி முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரதீப் பால்முச் புதுடெல்லியில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment