Sunday, June 10, 2012

ஒ.பி.சி உள் ஒதுக்கீடு:மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல்!


புதுடெல்லி: ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீட்டை வழங்கிய மத்திய அரசின் உத்தரவை ரத்துச்செய்த ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச்செய்துள்ளது. அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வருகிற திங்கள் கிழமை இம்மனு மீது விசாரணை நடத்தும்.
நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜே.எஸ். கேஹர் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இம்மனுவை விசாரிக்கும்.
“விரிவான சர்வே நடத்தப்பட்ட பின்பே உள்ஒதுக்கீடு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. எனினும் உயர் நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது’ என்று தனது மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியுள்ள, சிறுபான்மையினருக்கு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில், 4.5 சதவீதம் உள்ஒதுக்கீடாக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆந்திர உயர் நீதிமன்றம் மே 28-ம் தேதி அளித்த தீர்ப்பில், “மத்திய அரசு தீர ஆலோசிக்காமல் இந்த உள் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.அரசு அறிவிப்பில் “சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த’, “சிறுபான்மையினருக்கான’ என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் மத அடிப்படையிலேயே இந்த உள்ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது, அறிவுப்பூர்வமான அடிப்படையில் இல்லை என்பது தெளிவாகிறது’ என்று தெரிவித்தது.அனைத்து சிறுபான்மையினரையும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக கருதுவதற்கோ அல்லது பிற்படுத்தப்பட்டவர்களாக கருதுவதற்கோ எந்தவித ஆதாரத்தையும் துணை சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்யவில்லை.
எனவே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெüத்தர்கள், பார்சிகள் ஆகியோரை வேறுபட்ட குழுவினராகவே கருத முடியும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தற்பொழுது மேல்முறையீடுச்செய்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இம்மாதம் 13-ஆம் தேதி வரை சட்டரீதியான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தமாட்டோம் என்றும், ஒ.பி.சி சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒ.பி.சி பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்படும் என்றும் ஐ.ஐ.டிகள் மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment