Sunday, June 10, 2012

தமிழகத்தில் சூடு பிடிக்கும் கார்ட்டூன் விவாதம்!


சென்னை:என்.சி.இ.ஆர்.டி 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழகத்தில் 60களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமான கார்ட்டூன் இடம்பெற்றுள்ளது தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் சூடுபிடித்துள்ளது.
பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் என்பவர் இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.இந்த கார்ட்டூனை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் அச்சிட்டு 12-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் கேலிச் சித்திரம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் மொழிப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாமல் ஈடுபட்டதாக தீட்டப்பட்டுள்ளது. ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது திமுகவின் தாரக மந்திரங்களில் ஒன்றாகும்.
என்னைப் பொறுத்தவரையில் 1938-ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணிவகுத்து திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வருவேன். கையில் தமிழ்க்கொடியோடு, மூதறிஞர் ராஜாஜி கட்டாய ஹிந்தி என்று கட்டாரியால் தமிழ்த் தாயைக் குத்த முற்படுவது போன்ற படம் அமைந்த பதாகை ஒன்றைச் சுமந்துகொண்டு, ஓடி வந்த ஹிந்திப் பெண்ணே கேள் நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே என்றவாறு அந்த ஊர்வலம் செல்லும். அந்தப் போராட்டமும், அதன் பின் 1965-ம் ஆண்டு தமிழகமே ஹிந்திக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வரலாறும் திமுகவுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
அந்தப் போராட்டத்தைக் கிண்டல் செய்யும் அளவுக்கு மத்திய அரசின் பாடப் புத்தகத்தில் கேலிச் சித்திரம் இடம் பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் மனம் கொதிப்படைய செய்யும் காரியமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, இந்தக் கேலிச் சித்திரத்தை உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து அகற்றுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி(என்.சி.இ.ஆர்.டி) சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக இடம்பெற்றுள்ள கார்ட்டூனை நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் திங்கள்கிழமை (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரலாற்று உண்மையை மூடி மறைத்து, தமிழர்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களையும் ஏளனமாக இழிவு செய்யும் வகையில் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கேலிச் சித்திரம்(கார்ட்டூன்) இடம்பெற்றுள்ளது.
இதனை உடனடியாக நீக்க வலியுறுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஜூன் 11-ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment