
புதுடெல்லி:பிரதமர் மன்மோகன்சிங்கை, அன்னா ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடி மகாபாரத புராணக்கதையில் வரும் திருதராஷ்டிரனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பதிலளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், தனிநபர் தாக்குதல் கூடாது என்றும், ஹஸாரே குழுவினர் சுய நல பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவையும், சிறப்பு விரைவு நீதிமன்றங்களையும் அமைக்க வேண்டும் என்று ஹஸாரே குழுவினர் கோரிக்கை வைத்தனர்.
பிரதமர் அலுவலகம் அதை நிராகரித்து அன்னா ஹஸாரேவுக்கு கடிதம் எழுதியது. இது குறித்து சனிக்கிழமை பேசிய பேடி “பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதம் வெறும் கண்துடைப்பு” என்றார். மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூலை 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை தாக்கி அளித்த பேட்டியில், “பிரதமர் அலுவலகம் பிரதமருக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளது. மகாபாரதத்தில் வரும் திருதராஷ்டிரன் கெளரவர்களை ஆதரிக்கவில்லையா? திரெளபதியை துயிலுரித்த போதும் கூட அவர் கெளரவர்களை ஆதரிக்கவில்லையா?’ என்று கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை டிவிட்டரில் தெரிவித்தார்.
‘மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு எதிராகத்தான் ஹசாரே குழு போராடுகிறது. காரணம், அவர்களால்தான் சிறந்த சட்டத்தை கொண்டு வர முடியும். எதிர்கட்சிகளால் அது முடியாது’ என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ‘ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சுயநலப் பிரச்சாரமாக மாற்றியுள்ளனர். நேரம் வரும்போது அவர்களுக்கு நாடு தக்க பாடத்தை புகட்டும். நாட்டில் நல்லதொரு ஜனநாயகத்தை உறுதிச்செய்ய அவர்களால் இயலாது. ஹஸாரே குழுவினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அவர்கள் இதுவரை கோரவில்லை. அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முதலில் பதிலளிக்கட்டும். ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை துவக்கிவிட்டு தற்பொழுது தனிநபர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.’ இவ்வாறு சல்மான் கூறினார்.
No comments:
Post a Comment