Monday, June 11, 2012

வரதட்சிணை கொலை வழக்கில் குறைந்த பட்ச தண்டனை ஆயுள்!


Maximum penalty of life in dowry case!
புதுடெல்லி:வரதட்சிணையின் பெயரால் கொலைச் செய்யப்படும் பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு ஆயுள் சிறையை விட குறைவான தண்டனையை அளிக்க இயலாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது இளம் மனைவி ரேணு. இவர் வீட்டில் சமையல் செய்தபோது ஸ்டவ் வெடித்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் 1996-ம் ஆண்டில் நிகழ்ந்தது.
போலீஸ் விசாரணையில், ரேணுவை முகேஷ், அவரது தாயார் கைலாஷ்வதி, முகேஷின் சகோதரர் ஆகியோர் தொடர்ந்து வரதட்சிணை கொடுமைப்படுத்தி வந்ததும், ஸ்டவ் வெடித்தது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். முகேஷ், அவரது சகோதரர் ஆகியோர் தங்கள் இளம் வயதைக் கருத்தில் கொண்டும், கைலாஷ்வதியின் வயது முதிர்வைக் கருத்தில் கொண்டும் ஆயுள் தண்டனையைக் குறைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை நிராகரித்தது. ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையின் போது ரேணு மீது தீப்பற்றியபோது அவரைக் காப்பாற்ற முயன்றதாக முகேஷ் கூறியுள்ளார். ஆனால் அவரது உடலில் சிறு தீக்காயம் கூட ஏற்படவில்லை என்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. எனவே படுகொலையை அவர்கள் திட்டமிட்டே நிகழ்த்தியுள்ளனர்.
வரதட்சிணை கொடுமை செய்து பெண்ணை கொலை செய்வது மிகவும் கொடூரமானது. இந்த குற்றத்துக்கு குறைந்தபட்ச தண்டனையே ஆயுள் சிறைதான். எனவே உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment