புதுடெல்லி:குடியரசு தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி, ஹாமித் அன்சாரி உள்பட காங்கிரஸ் பரிந்துரைக்கும் எவரையும் ஆதரிக்கமாட்டோம் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. அதேவேளையில் காங்கிரசும், இதர கட்சிகளும் இணைந்து தேர்வுச் செய்யும் எந்த வேட்பாளரையும் ஆதரிக்க தயார் என்று பா.ஜ.கவின் மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் நேற்று(திங்கள் கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறியது:
குடியரசு தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை ஆதரிப்பதில் தயக்கமில்லை. குடியரசு துணைத் தலைவர் ஹாமித் அன்சாரி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் எவரையும் பாரதிய ஜனதா ஆதரிக்காது.
ஹாமித் அன்சாரிக்கு குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதி கிடையாது என்பதால் அவரை ஆதரிக்க நாங்கள் விரும்பவில்லை. குடியரசுத் துணைத் தலைவர் பதவியை பாரதிய ஜனதாவுக்குப் பெற்றுக்கொண்டு – அதற்கு கைம்மாறாக காங்கிரஸ் நிறுத்தும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்கும் எந்தத் திட்டமும் இல்லை.
நாங்கள் 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைக்கான பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். எனவே, காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
எங்களுக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு இருக்க வாய்ப்புண்டு. அதன்படி அவர்களது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவும், எங்களது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அவர்கள் ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது. நாங்கள் வெற்றிபெறும் நோக்கத்துடன் போட்டியிடுவோம். வெற்றிபெற எத்தனை வாக்குகள் தேவைப்படும் என்பதை கணக்கிட்டுத் தீர்மானிப்போம்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் போட்டியிடுவார் என்பதை நான் தெரிவிக்க முடியாது என்று கூறினார் சுஷ்மா.
No comments:
Post a Comment