
மனாமா:உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அப்துல் ஹாதி அல் கவாஜா உள்பட அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 21 எதிர்கட்சி உறுப்பினர்கள் மீதான வழக்குகளை சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைச் செய்ய பஹ்ரைனில் அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராணுவ நீதிமன்றத்தின் தண்டனை தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு சாட்சிகளிடம் இருந்து மீண்டும் வாக்குமூலம் பெறவேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறியது.
இரண்டு வாரத்திற்குள் மீண்டும் விசாரணை துவங்கும் என கருதப்படுகிறது. தண்டனை வழங்கப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலைச்செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் பொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொடூரமாக சித்திரவதைச் செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டின. அரசை கவிழ்க்க தீவிரவாத அமைப்பை உருவாக்கினார்கள் என்பது அவர்கள் மீதான முக்கிய குற்றமாகும். இதற்காக வெளிநாடு ஒன்றுடன் இணைந்து பணியாற்றினார்கள் என்று ராணுவ நீதிமன்றம் கூறியது.
அரசு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கினார் என குற்றம் சாட்டி நீதிமன்றம் கவாஜா உள்பட எட்டு பேருக்கு ஆயுள்தண்டனையை விதித்தது. இதனை எதிர்த்து குவாஜா நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் 2 மாதத்தை தாண்டியுள்ளது.
அதேவேளையில், இவ்வழக்கில் மறு விசாரணைக்கு தேவையில்லை என்று கவாஜாவின் மகள் மரியம் கருத்து தெரிவித்துள்ளார். ஒன்று தனது தந்தையை விடுதலைச்செய்ய வேண்டும். அல்லது அவரை மரணிக்க அனுமதிக்க வேண்டும் என்று மரியம் தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment