
துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல வர்த்தக குழுமமான அல் மனாமாவின் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இனி புகையிலை தயாரிப்புகளை விற்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
அமீரகத்தின் ஏழு மாகாணங்களில் இயங்கி வரும் அல்மானாமாவின் 16 அவுட்லெட்டுகளிலும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்வதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அக்குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எ.கே.ஷபீர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமுல்படுத்தும் புகையிலை எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒரு மாதத்திற்குள் எல்லா கடைகளிலும் முற்றிலுமாக சிகரெட் விற்பனையை நிறுத்துவது என்பது இக்குழுமத்தின் தீர்மானமாகும்.
லட்சக்கணக்கான பணம் வருமானத்தை பெற்றுத்தரும் சிகரெட் விற்பனையை நிறுத்தி புகையிலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள அல்மனாமா குழுமத்தின் நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். புகையிலை தயாரிப்புகளை விற்பனைச் செய்யமாட்டோம் என்ற அல்மனாமா குழுமத்தின் முடிவு வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய அரபு அமீரக தேசீய புகையிலை கட்டுப்பாட்டு கவுன்சிலின் தலைவர் டாக்டர்.வதீத் அல் மெய்தூர் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மார்க்கம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான காரணங்களால் யூனியன் கூட்டுறவு ஸ்டோர்களில் முன்னரே புகையிலை விற்பனை தடைச் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தவிர யு.ஏ.இயில் புகையிலை விற்பனையை நிறுத்தும் முதல் வர்த்தக குழுமம் அல்மனாமா ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தில் புகையிலை எதிர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக அட்நாக் பெட்ரோல் ஸ்டேசன்களுடன் இணைந்த ஸ்டோர்களில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில்லறை விற்பனை மையங்கள் புகையிலை விற்பனையை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment