Saturday, March 31, 2012

ராணுவத்தின் பிடியில் வாழும் கஷ்மீரில் காலியாக கிடக்கும் 3 லட்சம் வீடுகள்


3 lakh houses vacant in JK
ஜம்மு:இருபது ஆண்டுகளாக ராணுவ பீதியில் ஆழ்ந்துகிடக்கும் ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் ஆட்கள் வசிக்காமல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காலியாக கிடக்கின்றன. மனிதர்கள் வாழாத அழகான வீடுகளும், துரும்பு படிந்த கதவுகளும், ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்களும் அழகான கஷ்மீரின் பீதியூட்டும் காட்சிகளாக மாறியுள்ளன.
1990 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கஷ்மீரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்கள் வாசம் இல்லாமல் காலியாக கிடக்கின்றன. ஆட்கள் இல்லாமல் மூடிக்கிடக்கும்  அல்லது எப்பொழுதாவது அதன் உரிமையாளர்கள் வந்து செல்லும் வீடுகள் பெரும்பாலும் மாளிகைகள் போன்ற பங்களாக்கள் என்பதுதான் விஷேசமான செய்தி. இந்த வீடுகளின் மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் துயரமான காட்சிகளுக்கும் கஷ்மீர் சாட்சியம் வகிக்கிறது. ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போதிய வசதிகள் இல்லாத பகுதிகளில் நெருக்கமாக வசித்து வருகின்றனர். ஒரே அறையில் பல பேர் தங்கும் அவலம்.
சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களால் கட்டப்பட்ட அழகான மாளிகைகள் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. அரசு அதிகாரிகள், தலைமை அதிகாரிகள், வர்த்தகர்கள் ஆகியோர் இத்தகைய அழகான பலமாடி கட்டிடங்களை கட்டியுள்ளனர். 90 ஆயிரம் கோடி மதிப்பு வரும் இத்தகைய மாட, மாளிகைகளை அதன் உரிமையாளர்கள் அல்லாதோர் பயன்படுத்த இயலாது என்று ஒரு அரசு செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
இவ்வீடுகளில் பெரும்பாலானவை 20 ஆண்டுகளுக்கு முன்பு காலிச் செய்யப்பட்டவையாகும். ஆனால், ஜம்மு-கஷ்மீர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 64 ஆயிரம் வீடுகள் காலிச் செய்யப்பட்டுள்ளன.
2001-ஆம் ஆண்டு முதல் 2,40,000 வீடுகள் காலியாக கிடக்கின்றன. 2011 ஆம் ஆண்டில் காலிச் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,04,000 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் சந்திரசேகர் ஸ்வரூப் வெளியிட்டுள்ளார். ஆனால் காலிச் செயப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் குறித்த விபரத்தை அவர் வெளியிடவில்லை.
வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு வீடும் கஷ்மீர் மாநிலத்தின் கலாச்சார, பாரம்பரியத்தையும், முன்னர் மாநிலத்தில் நிலவிய பொருளாதார மேம்பட்ட நிலையையும் எடுத்து இயம்புவதாக இந்தியன் நேசனல் ட்ரஸ்ட் ஃபார் ஆர்ட் அண்ட் கல்சுரல் ஹெரிட்டேஜ் ஜம்மு-கஷ்மீர் பிரிவின் தலைவர் ஸலீம் பேக் கூறுகிறார்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின் படி மாளிகைகளும், குடிசைகளும் உள்ளிட்ட மாநிலத்தின் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 36,03,632 ஆகும். இவற்றில் 32,99,219 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே மிகுந்த இடைவெளி நிலவும் கஷ்மீர் மாநிலத்தில் 6,80,000 ஏழை மக்கள் ஒரேயொரு அறையை மட்டும் கொண்ட வீடுகளில் வசிக்கின்றனர்.

No comments:

Post a Comment