Wednesday, August 3, 2016

தஞ்சாவூர் தலித் பெண் பாலியல் படுகொலை ஏன் கவனம் பெறவில்லை? எவிடன்ஸ் கதிர் கேள்வி!

தஞ்சாவூர் பகுதியில் ஆதிக்க சாதி இந்துக்கள் தலித் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமகக் கொலை செய்வது மோசமான தொடர் நிகழ்வாக அச்சு மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவு செய்த சமீபத்திய சம்பவம் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது பதிவில் இருந்து;
தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமம் சாலியமங்கலம். இந்த கிராமத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சார்ந்த கலைச்செல்வி என்கிற 20 வயது பெண்ணை ராஜா, குமார் என்கிற இரண்டு சாதி இந்துக்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்து உள்ளனர்.அந்த பெண்ணின் வாயில் கிழிந்து போன ஜட்டியை வைத்து அடைத்து காய் கால்களை கட்டிப் போட்டு கடுமையாக அடித்து சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளனர். ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இங்கு மட்டுமாக 15 - 20 பெண்களை ஆதிக்க சாதி இளைஞர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்கின்றனர். போலீஸ் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. இங்குள்ள தலித் மக்கள் நாங்கள் உணர்ச்சி அற்று பிணங்களாக வாழ்ந்து வருகிறோம் என்கின்றனர். சுவாதி படுகொலைக்கு எதிராக பெரிய அளவில் கொந்தளித்த தமிழகம் கலைச்செல்வி படுகொலைக்கு அமைதியாக இருக்கிறது. செய்தி கூட வெளியே வரவில்லை. வெட்கமாக இருக்கிறது. நீதியின் குரலில் அடிக்கும் பாகுபாட்டின் வாடை 10 நாட்கள் அழுகிப்போன பிண வாடையை விட நாறுகிறது. சுடுகாட்டில் புதைக்கப்பட்ட கலைச்செல்வி, " நீங்களும் பிணங்கள்தான் ஆனால் நான் புதைக்கப்பட்டு விட்டேன். நீங்கள் புதைக்கப்படவில்லை. இது ஒன்றுதான் வேறுபாடு" என்று சொல்லுவது போன்று இருந்தது. மன்னித்து விடு கலைச்செல்வி நீ பெரிய சாதியில் பிறந்து இருக்கவேண்டும். நகரத்தில் வசித்து இருக்க வேண்டும். ஐ.டி பணி செய்து இருக்கவேண்டும். ஆனால் நீயோ எளிய சாதியில் பிறந்து இருக்கிறாய். என்ன செய்வது? என்று மிகுந்த வருத்ததுடன் பதிவு செய்திருக்கிறார்.
இந்த அராஜகத்தின் மீதான காவல்துறை நடவடிக்கைகள் திருப்தியானதாக இல்லை. உயர்சாதியினருக்கு ஆதரவாக இருப்பதாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டுள்ளது. காவல்துறை பொறுப்புணர்ந்து பாகுபாடின்றி செயல்படுமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.



கொலைகளையும் பிணங்களையும் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களோடு போராடும் கதிர் (Vincent Raj) கலைச்செல்வியை பார்த்தப் பின்னர் ’தன் அனுபவத்தில் இப்படியொரு கொடூரத்தைக் கண்டதில்லை’ என்கிறார். அந்த வரிகள் உண்டாக்கிய பதற்றம் அடங்கவே இல்லை. தலித் பெண்கள் இவ்வாறே கொடூரமாக சிதைக்கப்பட்டு கேட்பாரற்று மறக்கப்படுகின்றனர்.
நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி போன்ற தலித் பெண்களுக்கு அது நடக்கும் போது தனக்கு சம்பந்தமில்லாதது போல அமைதி காக்கின்றனர். கயர்லாஞ்சியில் கொல்லப்பட்ட சுரேகா - பிரியங்கா இருவரும் ஆதிக்க சாதி பெண்கள் வேடிக்கை பார்க்க ஆதிக்க சாதி ஆண்களால் பிறப்புறுப்பில் கழியடித்துக் கொல்லப்பட்டனர். கேரளாவை சேர்ந்த ஜிஷா கொடூரமான பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின்னர் நடந்த தாக்குதலில் குடல் சரிந்து மரித்தார். கலைச்செல்வி கடுமையான சித்ரவதை மற்றும் தாக்குதலுக்குப் பின்னர் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்.
நிர்பயா சுவாதி போன்ற ஆதிக்க சாதி பெண்களின் கொலைகள் சமூக இயங்கியலுக்கு எதிரான அச்சுறுத்தலாகக் கருதப்படும் அதே வேளையில் கலைச்செல்வி போன்ற தலித் பெண்கள் மீதான தாக்குதல்கள் சமூக இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதுவொரு விவாதப் பொருளாக ஆவதே இல்லை. ஊடகங்களும் அறிவுச் சமூகமும் அரசு நிர்வாகமும் மூச்சடைத்து செத்துவிடுகின்றன.
இந்தியாவில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் சாதியே அதற்கான நீதியை தீர்மானிக்கிறது. குற்றவாளி ஆதிக்க சாதியை சேர்ந்தவராக இருந்து பாதிக்கப்படைகிறவர் ஒடுக்கப்பட்டவராக இருந்தால் அது ஊடகங்களில் ஓர் ஓரமாக செய்தியாகும் தகுதி கூட இல்லாதவை ஆகின்றன. ஆனால் குற்றவாளி யாராக இருந்தாலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டவராக இருந்து பாதிப்படைகிறவர் ஆதிக்க சாதியினராக இருந்தால் அவ்வளவுதான் அதுவொரு தேசிய பிரச்னை. நாடாளுமன்றத்தில் (ஆதிக்க சாதி) பெண்கள் பாதுகாப்பு சட்டமியற்றும் வரை ஊடகங்கள் அதை விவாதித்துக் கொண்டே இருக்கும்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் கலைச்செல்வியைப் போல கொடூரமான முறையில் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். யார் அது குறித்து கவலைப்படுவது, பேசுவது, விவாதிப்பது, தடுப்பது? சுரேகாவும் பிரியங்காவும் இருவரும் சுய மரியாதையோடு வாழ முற்பட்டதற்காகவே மகனோடும் சகோதரனோடும் உறவுகொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். அதை மறுத்ததற்காகவே ஊரில் உள்ள பல ஆண்களால் வல்லுறவு செய்யப்பட்டு, பின்னர் உச்சகட்டமாக பிறப்புறுப்பில் மரக்கழிகளை அடித்து கொல்லப்பட்டனர். ஆனால் இந்த கொடூரத்தை ஊடகங்களும் அரசும் மூடி மறைத்தனவே தவிர அதை அம்பலப்படுத்தவில்லை. ஆனால் நிர்பயா விஷயத்தில் என்ன நடந்ததென நமக்குத் தெரியும்.
படித்த, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்த, வெள்ளை நிற பெண்களுக்கு கொடுமைகள் நேர்ந்தால் பலருக்கும் ரத்தம் கொதிக்கிறது. அதுவே கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வசதியற்ற, கறுப்பு நிற பெண்களுக்கு ரத்தம் குளிர்ந்துவிடுகிறது. ஒடுக்கப்பட்டோர், வாழ்வில் மட்டுமல்ல சாவிலும் கூட பாகுபாட்டை சுமக்கின்றனர், கொலையிலும் அநீதி அவர்களை சூழ்ந்து நிற்கிறது.
தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது பெண் என்ற காரணத்திற்காக அல்ல...தலித் என்பதற்காக. சாதிதான் அவர்களை வன்புணர்ச்சிக்கு இரையாக்குகிறது. ஆனால் தலித் பெண்கள் மீதான தாக்குதல்களுக்கான எதிர்வினை பெண் என்ற அடிப்படையில் கூட நிகழ்வதில்லை என்பதுதான் வேதனை. இச்சமூகத்தின் கருணையை, அன்பை, கவனத்தை, ஆதரவைப் பெறத் தகுதியற்றவர்களாக அவர்கள் நாள்தோறும் மடிகின்றனர்.
தலித் பெண்கள் சாதியால் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றாமல் பெண்ணுரிமை இங்கே எப்படி சாத்தியப்படும்? பாலின சமத்துவத்தை வேண்டுவோர் முதலில் ஆதிக்கமாகவும் அடிமையாகவும் பெண்களை பிரித்து வைத்திருக்கும் சாதியை வேரறுக்க வேலை செய்ய வேண்டும். அதுவரை சாதியத்தை எதிர்க்காத பெண்ணியம் இங்கே தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறது.

No comments:

Post a Comment