Thursday, January 29, 2015

டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை வீசுகிறது - கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி
டெல்லி சட்டசபை தேர்தலில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை வீசுவது, கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
கருத்துக்கணிப்பு
டெல்லி சட்டசபைக்கு வருகிற 7–ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாததால், பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் அலை பற்றி ‘ஏபிபி நியூஸ்– நீல்சன்’ சார்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதீய ஜனதா முதல்–மந்திரி வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 24, 25 தேதிகளில் இந்தக் கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அதிகரிப்பு
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதம்பேர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஓட்டு போடப்போவதாக கூறி உள்ளனர். இது கடந்த 15 நாட்களுக்கு முன்னர், இதே அமைப்பினர் நடத்திய கருத்துக்கணிப்பை விட 4 சதவீதம் கூடுதல் ஆதரவு ஆகும்.
அதாவது ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு 15 நாளில் மேலும் அதிகரித்துள்ளது.
பாரதீய ஜனதாவுக்கு சரிவு
அதே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியின் செல்வாக்கு குறைந்திருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு காட்டுகிறது.
15 நாட்களுக்கு முன் 45 சதவீதம் இருந்த ஆதரவு 4 சதவீதம் குறைந்து, 41 சதவீதம் ஆகி உள்ளது. இது கிரண் பேடியை முதல்–மந்திரி வேட்பாளராக அறிவித்திருப்பதால் பாரதீய ஜனதா கட்சிக்கு ஓட்டுக்கள் குவியாது என்பதை காட்டுவதாக அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடப்போவதாக கூறி உள்ளவர்களில் 84 சதவீதம்பேர், தங்கள் முடிவில் ஆணித்தரமாக உள்ளனர்.
முதல்–மந்திரி வேட்பாளர்
டெல்லியில் முதல்–மந்திரி பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத்தான் மக்கள் இன்னும் முன்னுரிமை தருவதாக தெரிகிறது. அவர் முதல்–மந்திரி ஆவதற்கு 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தற்போது அவருக்கு ஆதரவாக அலை வீசுவதாக கூறப்படுகிறது.
கிரண்பேடிக்கு 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கானுக்கு 8 சதவீதம் பேரின் ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது.
ஓட்டு வங்கி
இந்த சர்வேயில் சிறுபான்மையினர், ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகத்தினர், குறைவான வருவாய் பிரிவினர் ஓட்டு வங்கி ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ளது.
உயர்வருவாய் பிரிவினர் ஆதரவு, பாரதீய ஜனதாவுக்கு உள்ளது.
பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிற பலரும், பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிப்பதற்காகத்தான் தாங்கள் பாரதீய ஜனதாவுக்கு ஒட்டு போட விரும்புவதாக கூறி இருக்கிறார்கள்.
இந்த கருத்துக்கணிப்பு 70 தொகுதிகளில் 2,262 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.
அருண் ஜெட்லி களம் இறங்குகிறார்
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் அளவுக்கு தனக்கு கூட்டம் கூடுவதில்லை என்பதில் கிரண் பேடி கவலை அடைந்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக பாரதீய ஜனதா, பிரசார வியூகம் வகுத்து செயல்படுத்துவதில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியை களம் இறக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் இறங்க உள்ளார்.
தற்போது, 11 மத்திய மந்திரிகளையும், 17 எம்.பி.க்களையும் பாரதீய ஜனதா தேர்தல் பிரசார களத்தில் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment