Sunday, March 9, 2014

இராமநாதபுரம் தடியடி: தமிழக அரசின் மௌனம் வருத்தம் அளிக்கிறது! – பாப்புலர் ஃப்ரண்ட்


Khalidசென்னை: “இராமநாதபுரம் தடியடி சம்பவம் குறித்து தமிழக அரசின் மௌனம் வருத்தம் அளிக்கிறது” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. காலித் முஹம்மது விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாப்புலர் ஃப்ரண்ட்டின் மாநில செயற்குழு நேற்று மார்ச் 6 ஆம் தேதி சென்னை மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது, எம். முஹம்மது அன்சாரி, ஜே. முஹம்மது ரஸீன், எஸ். முஹம்மது இல்யாஸ் மற்றும் பிற செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

பிப். 17 அன்று இராமநாதபுரத்தில் நடத்தப்படவிருந்த பாப்புலர் ஃப்ரண்ட் தின நிகழ்ச்சியில் காவல்துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரும், திட்டமிட்டு அத்துமீறி தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீதும், அவர்களின் பின்னணியில் இருந்து செயல்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீதும், தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு நீதி விசாரனை நடத்த வேண்டும்.
முஸ்லிம்கள் மீது அநீதமான முறையில் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும், காயம் பட்ட மக்கள் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கூட தமிழக அரசு இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து மவுனம் காத்து வருவது கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பொய் வழக்குகள், சட்ட விரோத செயல்கள் அரங்கேற்றப்பட்டு வருவது முஸ்லிம்களிடையே கடும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சம உரிமை, சம நீதி மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து வீரியமாக போராடுவது என்று மாநில செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
வரவேற்பு
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாநில அரசின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 நபர்களின் ஆயுள் தண்டனையை குறைத்து உடனடியாக விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்கிறது.
இந்த அரிய தருணத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையையும் பரிசீலிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாளில் கடந்த தி.மு.க. அரசு 1405 கைதிகளை விடுதலை செய்த போதும் முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படாமல் ஒரு பெரும் பாரபட்சம் நிகழ்த்தப்பட்டது.
மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கும்போது சாதி மத பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் பல இயக்கங்கள், கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதனடிப்படையில் 10 வருடத்திற்கும் மேல் சிறைவாசம் அனுபவித்த சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது பற்றி பரிசீலித்து தங்களின் தேர்தல் வாக்குறுதியில் உட்படுத்த வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
இடஒதுக்கீடு
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவது பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திட சிறுபான்மைக் கமிஷனுக்கு தமிழக அரசால் இடப்பட்ட உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்கிறது. 2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஜனத்தொகை 5.6% என்று அறிவிக்கப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பில் ஒரு கணிசமான முஸ்லிம்கள் விடுபட்டுள்ளார்கள் என்பது ஜமாஅத்துகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சாதிவாரி ஜனத்தொகை இன்னும் வெளியிடப்படவில்லை. முஸ்லிம்களின் மக்கட்தொகை குறைந்தபட்சம் 7% இருக்கிறது என்ற அடிப்படையில் விகித்தாச்சார அடிப்படையில் 7% சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முஸ்லிம்கள் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை வைக்கிறது.
இந்தக் கோரிக்கையையும் தமிழக முதல்வர் பரீசீலித்து தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறச் செய்யுமாறு மாநில செயற்குழு கேட்டுகொள்கிறது.
இவ்வாறு ஏ. காலித் முஹம்மது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment