புதுடெல்லி: பெண்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் அத்துமீறி சோதனை நடத்தியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீது வழக்குப் பதிவு செய்யும்படி டெல்லி போலீஸூக்கு மாவட்ட நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து, சோம்நாத் பார்தியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தெற்கு தில்லியில் உள்ள கிர்க்கி கிராமத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாகவும் பாலியல் தொழிலில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்ததாக கூறி,
டெல்லி பிரதேச சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி, அவரது ஆம் ஆத்மி தொண்டர்கள் சிலருடன் அப் பகுதியில்புதன் இரவு சோதனையில் ஈடுபட்டார். அப்போது, உகாண்டா நாட்டைச் சேர்ந்த சில பெண்களிடம் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பெண்கள் நால்வர் போலீஸில் புகார் அளித்தனர்.இந்த சோதனையின் போது, அப்பகுதியில் வசிக்கும் உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பெண்கள், போதைப் பொருள் உள்கொண்டுள்ளனரா என்பதைக் கண்டுபிடிக்க, அவர்களில் சிலரிடம் வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமைச்சர் சோதனை நடத்தியபோது, ஆப்பிரிக்க பெண்களிடம் வலுக்கட்டாயமாக பொது இடத்தில் வைத்து சீறுநீர் மாதிரி பெறப்பட்டது’ எனகுற்றம் சாட்டினார். இந்நிலையில், அமைச்சரின் “சோதனை நடவடிக்கை’யின்போது அவர் அத்துமீறி செயல்பட்டதாக பாதிக்கப்பட்ட உகாண்டா பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். மேலும் சில ஆப்பிரிக்க நாட்டவர்களும் அப்பகுதி குடியிருப்புவாசிகளும் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மனுவை அவசரகால வழக்காக தில்லி மாவட்ட நீதிபதி சேத்னா சிங் ஞாயிற்றுக்கிழமை விசாரித்தார்.அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரைப் பதிவு செய்து சோம்நாத் பார்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வசித்த பகுதியில் சட்டவிரோதமாக சோதனை நடத்தி அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தை தேசியமனித உரிமைகள் ஆணையமும் தன்னிச்சையாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதையடுத்து, சோம்நாத் பார்தி, மத்திய உள்துறைச் செயலர், தில்லி போலீஸ்ஆணையர், தில்லி அரசின் தலைமைச் செயலர் ஆகியோர் மூன்று நாள்களுக்குள் பதில் அளிக்கும்படி ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இச் சம்பவத்துக்கு ஏற்கெனவே பிரகதிஷீல் மஹிளா சங்கம் உள்ளிட்ட மகளிர்அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டம் படித்த அமைச்சர் சோம்நாத் பார்தியே சட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும்,பத்திரிகைகளில் வெளியான செய்தியைதாமாக முன்வந்து விசாரித்த தேசிய மகளிர் ஆணையமும் இச் சம்பவத்துக்குகண்டனம் தெரிவித்துள்ளது.மேலும், “அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு அத்துமீறி செயல்பட்டு வரும் சோம்நாத் பார்த்தியை அப்பதவியில் இருந்து முதல்வர் கேஜரிவால் நீக்கவேண்டும்’ என்று டெல்லி பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தினார்.”
டெல்லியில் இரவில் சோதனை என்ற பெயரில் ஆப்பிரிக்க நாட்டவர் சிலரிடம் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியும் அவரது கட்சித் தொண்டர்களும் நடந்து கொண்ட விதம் தண்டனைக்குரியவை; கண்டிக்கத்தக்கவை’ என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.இதற்கிடையே, இச்சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனத்தைத் தெரிவித்தது.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் பெண்களிடம் அத்துமீறி சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மீண்டும் மறுத்திருக்கிறார். தனக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது குறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுவது பற்றி எதுவும் தெரியாது. என் மீது வழக்குத் தொடரப்பட்டால் உரியவிளக்கத்தை அளிப்பேன். சோதனை சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தொண்டர்கள் யாரும் எந்தப் பெண்ணையும் தரக்குறைவாக நடத்தவில்லை’ என்று மறுத்தார்.
No comments:
Post a Comment