சேலம்:- பா ஜ க மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சேலத்தில் தலைமறைவாக உள்ள கூலிப்படைத் தலைவனுக்குத் தொடர்பு உள்ளது பற்றி சி.பி.சி.ஐ.டி.பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19–ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி)மஞ்சுநாதாவும் சேலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குத் தொடர்பாக சேலத்தில் உள்ள பிரபல ரவுடிகளின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், சேலம் முள்ளுவாடி கேட்டு பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 38) என்பவரிடமும் சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஷாஜகான் வீட்டில் சி.பி.சி.ஐ.டி.காவலர்கள் சோதனை நடத்தி, கத்தி, வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆடிட்டர் ரமேஷ் கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கொலை தொடர்பாகச் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குத் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முள்ளுவாடி கேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஷாஜகானிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக அன்னதானப்பட்டியை சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் முரளி (27) என்பவரைத் தேடி வருகிறோம். இவர் சிட்டிக்கு வெளியில் 20 பேரை வைத்துக் கூலிப்படை நடத்தி வருகிறார். தற்போது முரளி தலைமறைவாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னதானப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை முரளி தலைமையிலான கூலிப்படை செய்தது தெரியவந்துள்ளது. முரளி மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன. இருப்பினும் ஆடிட்டர் ரமேஷ் கொலையிலும் ரவுடி முரளிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால் அவரை தேடி வருகிறோம் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் கூறினர்...
No comments:
Post a Comment